மேக தாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது : அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: மேகதாதில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வைகோ: (மதிமுக பொதுச் செயலாளர்): காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 1892ம் ஆண்டில் மைசூர் மாகாணத்திற்கும் - சென்னை மாகாணத்திற்கும் இடையே உருவான ஒப்பந்தம், 1924ல் போடப்பட்ட ஒப்பந்தம் ஆகிய இரண்டுமே, காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்து இருக்கின்றன. 1924ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமும் அதையே குறிப்பிடுகிறது. இந்த ஒப்பந்த விதி 10ல் 15 உட்பிரிவுகளில் இரு மாநிலங்களும் புதிய நீர்த்தேக்கங்களை கட்டிக் கொள்வது, நீரை பகிர்ந்து கொள்வது குறித்த நடைமுறைகளை வரையறுக்கின்றன. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பும், 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் உருவான ஒப்பந்தத்தின் விதிகளையே அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டது. அதனால் தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி  தேவையில்லை என்றும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும்  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது  மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது 2018 பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பிற்கு எதிரானதாகும். ஏற்கனவே, மேகதாதுவில் அணை  கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்திருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் மேகதாதுவில் அணை கட்ட தடை  விதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு  எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அதிமுக அரசுக்கு  இருக்கிறது. நரேந்திர மோடியின் மூலமாகவும், உச்ச நீதிமன்றத்தை அணுகுவதன்  மூலமாகவும் உரிய தீர்வு காண வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மத்திய சுற்றுச்சுழல்   அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ்நாட்டின் கருத்து தேவையில்லை   என்று தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடக பாஜ அரசு காவிரி   நதிநீர் பிரச்னையில் நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி   நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு, காவிரி ஒழுங்காற்றுக்குழு, காவிரி மேலாண்மை   ஆணையம் ஆகியவற்றின் கோட்பாடுகளை, வழிகாட்டுதலை கர்நாடக அரசு மீறி   மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசிடம் கருத்து கேட்கத்தேவையில்லை என்று   தன்னிச்சையாக முடிவெடுப்பது நியாயமில்லை. தமிழக அரசும் மத்திய அரசிடம் கர்நாடக அரசின்   இம்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தமிழக அரசிடம் கருத்து கேட்காமல்   காவிரியில் அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்): மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிகேட்டு கர்நாடக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்காது எனவும் வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்துகிறோம். இதுதொடர்பாக தமிழக அரசு, விழிப்புடன் செயல்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

Related Stories: