நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் உயர் பதவியில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு : முத்தரசன் குற்றச்சாட்டு

பழநி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் உயர்  பொறுப்பில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதனை வெளிக்கொணர  சிபிஐ விசாரணைவேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே தொப்பம்பட்டியில் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சாதாரண மக்களுக்கு எதிராகவும், பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டே காரணம். மத்திய அரசு ரயில்வே உள்ளிட்ட துறைகளையும், தமிழக அரசு மின்சார பஸ்களையும் தனியார்மயமாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது பெரும் தவறு.

தெலங்கானாவில் 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்தது சர்வாதிகார போக்கை காட்டுகிறது. தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதை சாதாரண அதிகாரிகளால் மட்டும் செய்திருக்க முடியாது. அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவின்றி செய்ய முடியாது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் உயர் பதவி, பொறுப்பில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதனை வெளிக்கொணர சிபிஐ விசாரணை வேண்டும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டும் வகையில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற கடுமையாக உழைப்போம்.

Related Stories: