மாமல்லபுரத்திற்கு வரும் பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்கிறேன் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நடத்தும்  இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு  பெருமை தரத்தக்கது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: இந்தியா போலவே, மிகப் பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என்று மனமார வரவேற்கிறேன். சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு அவர் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் புரட்சிகளில் ஒன்று சீனப்புரட்சி. பொதுவுடைமைத் தத்துவத்தைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு லட்சக்கணக்கான மக்களுடன் சீனப் பெருந் தலைவர் மாவோ நடத்திய மகத்தான பேரணியை  அடுத்து,  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய புரட்சி, 1949ம் ஆண்டு சீனத்தில் ஆட்சியைக் கைப்பற்றி, அதைச் செஞ்சீனமாக மாற்றி, உலகத்தையே திரும்பிப் பார்த்திட வைத்தது. உழைக்கும் வர்க்கம் முன்னின்று தீரத்துடன் நடத்திய அந்த மாபெரும் புரட்சியின் எழுபதாம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை, கடந்த அக்டோபர் 1ம் நாள் நடத்திவிட்டுத் தான் சீன அதிபர் தமிழகம் வருகிறார். அதே 1949ம் ஆண்டு தான், தமிழகத்தில் திமுக என்கின்ற மாபெரும் சமூகப் புரட்சி இயக்கமும் அண்ணாவால் தொடங்கப்பட்டது. திமுகவும் தனது 70வது ஆண்டு விழாவைப் போற்றிக் கொண்டு இருக்கிறது.

Advertising
Advertising

“ஆயிரம் பூக்கள் மலரட்டும்” என்று, மானுடத்திற்கு அரிய தத்துவத்தைத் தந்த  மாவீரர் மாவோ; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரால் முத்தான தமிழில் ஏற்றிப் போற்றிப் பாராட்டிப் புகழப்பட்ட புரட்சி நாயகர் மாவோ; அவர் வழியில் புயலாக வீசிய அந்த சீனப்புரட்சிதான்,  அடுத்தடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் உருவான சமூக,  அரசியல்,பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. அத்தகைய தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது உண்மையில் பெருமைக்குரியதாகும்.தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல; குடியரசு காலத்துக்கும் காலனிய காலத்துக்கும் முந்தைய மன்னராட்சிக் காலங்களில் இருந்து தொடர்கிறது. சீனப் பயணியும் புத்தத் துறவியுமான  யுவான் சுவாங் தமிழகத்தைக் காண வந்தார். அவர் வந்து சென்ற மிக முக்கியமான ஊர், பல்லவர் காலத் தலைநகரமான காஞ்சிபுரம். அந்த மாவட்டத்துக்குத்தான் இன்றைக்கு சீன அதிபர் வருகிறார். தமிழகத்தின் கலைநகரம் மாமல்லபுரம். கல்லில் கலைவண்ணம் கண்டு, கவிதைகளாகச் செதுக்கிய ஊர். பல்லவ நாட்டின் மிக முக்கியமான துறைமுகம் இருந்த கடற்கரை நகரம் அது. மாமல்லபுரத்தை உலகப் பண்பாட்டுச் சின்னமாகக் கருதி ‘’யுனெஸ்கோ’’ விருது தந்துள்ளது. இந்தியத் தொல்லியல் நகரங்களில் தலையாயது மாமல்லபுரம். சிற்பங்கள், மண்டபங்கள், தேர்கள், ரதங்கள், கட்டுமானக் கோவில்கள், கடற்கரைக் கோவில், புடைப்புச் சிற்பங்கள் என சிலை நகர் அது. அக்கலை நகருக்குத்தான் சீன அதிபர் வருகிறார்.

உலகம் உற்றுநோக்கி, பாடம் பெறத் தகுந்த ஒரு தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது தமிழர்கள் அனைவருக்கும் பெருமைதரத் தக்கது என்ற அடிப்படையிலும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் அவரை, திமுக சார்பில், வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது.இந்திய-சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “தேசம் வேறு வேறு ஆனாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே” என்ற அடிப்படையில் அமையும் இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்ல,  உலக சமுதாயத்துக்கும் ஒளிதருவதாய் அமையட்டும் என்றும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழடியில் அருங்காட்சியகம்

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:பழந்தமிழரின் சங்ககால நாகரிகத்தின் பெருமைகளை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை, அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து, அவற்றை மக்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த மூவாயிரத்துக்கும் அதிகமான பொருட்கள், பெங்களூருவுக்கும் பிற இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. அவற்றை மீண்டும் கீழடிக்கே கொண்டு வரவேண்டும். அதற்கேற்ப அருங்காட்சியகத்தை விரைந்து அமைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: