உடன்குடி: ஏழைகளின் அமுத பானம் பதனீரில் கலப்படம் கலந்ததால் வியாபாரிகள் வசமாக சிக்கிக்கொண்டனர். உடன்குடி பகுதியில் அதிகாரிகளின் திடீர் சோதனையில் 40 டன் கருப்பட்டி மற்றும் அதை சார்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கலப்படம் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒரு காலத்தில் பனைத்தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் லட்சக்கணக்கான பனைகள் இருந்தன. சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 3 மாதங்கள் பதனீர் சீசன் காலமாகும். அப்போது வீட்டுக்கு வீடு பதனீர் காய்த்து கருப்பட்டி தாயரிப்பு தொழில் அமோகமாக இருக்கும். பனையில் இருந்து என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இதுபோல் பதனீர் அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
கருப்பட்டியில் காபி, டீ போட்டு குடிப்பார்கள். பலவிதமான பண்டங்கள் செய்து சாப்பிடுவார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த பனைத்தொழில் வறட்சி, லாபமின்மை, பனை ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கரைந்து போய்விட்டது. இதனால் பனைமரங்களும் லட்சக்கணக்கில் பட்டுப் போய்விட்டன. சில இடங்களில் பெயரளவிற்கு பனை மரங்கள் உள்ளன. இதில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பொருட்களுக்கும் இன்று ஆபத்து வந்து விட்டது. நீரழிவு நோயாளிகள் கூட கருப்பட்டி சேர்க்கலாம் அதில் சுகர் இல்லை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தபோதும் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. மருத்துவ பொருட்களாக நாம் பயன்படுத்தி வந்த கருப்பட்டியில் பண ஆசை பிடித்தவர்கள் அதில் பாதிக்கு பாதி சீனியை கலந்து கருப்பட்டி என்ற பெயரில் கொள்ளை லாபம் பார்த்து வருகிறார்கள்.
இந்த கலப்படத்தால் கருப்பட்டி பிரதானமாக பயன்படுத்தி வந்த தென் மாவட்ட மக்கள் இன்று அதை பார்த்து நடுங்கும் அளவிற்கு பெயரை கெடுத்து விட்டார்கள்.இதுபோன்ற கலப்பட விவரம் தெரியாதவர்கள் மட்டுமே கருப்பட்டி வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். கருப்பட்டியில் சீனி கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அந்த கருப்பட்டி சிகப்பு வெள்ளை கலந்து காணப்படும். ஒரிஜினல் கருப்பட்டி என்றால் சற்று கருப்பு நிறத்தில் இருக்கும். பதனீர் காய்க்கும்போது எடுக்கப்படும் கருப்பட்டிகள் மட்டும் செந்நிறமாக இருக்கும். இதை இருப்பு வைத்து ஓரிரு மாதங்கள் கழித்து பார்த்தால் இந்த கருப்பட்டிகள் கருப்பாக மாறி இருப்பதோடு வைரம் பாய்ந்தது போல் இருக்கும். இது போன்ற ஒரிஜினல் கருப்பட்டிகள் ஆண்டு கணக்கில் கெட்டு போகாது. வீடுகளில் இருப்பு வைத்து நாம் பயன்படுத்தலாம்.
கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றில் சீனி கலப்படம் செய்யப்படுவது இன்று நேற்றல்ல, 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. இதனால் கருப்பட்டி பயன்படுத்துவோர் குமுறியதோடு சுகாதார துறைக்கும் புகார் மனுக்கள் அனுப்பினர். அதிகாரிகளும் அவ்வப்போது வந்து சோதனை நடத்திவிட்டு செல்வார்களே தவிர எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது பாயாது. ஆனால் சமீப காலமாக பனைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பனைவிதைகளை கொடுத்து நீர் நிலை உள்ள பகுதிகளில் விதைத்து வருகின்றனர். அதன்படி தொடர்ந்து அந்த பணி நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது.இதற்கிடையில் கருப்பட்டி கலப்பட புகார்கள் தொடர்ந்து செல்வதால், அதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் இந்த தொழிலுக்கு பெயர் போனது.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கலப்படத்தை ஒழிக்கும் விதமாக சுகாதார துறையை முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடன்குடி வந்தனர். இங்குள்ள 5 கருப்பட்டி நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது தயாரிக்கப்பட்டு பொட்டலமிடப்பட்ட கருப்பட்டி, சீனி கற்கண்டு, பனங்கற்கண்டு, சீனி கருப்பட்டி, பனங்கருப்பட்டி ஆகியவற்றில் குறிப்பு சீட்டு எதுவும் இல்லாமல் இருப்பதை பார்த்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையில் முறையான தயாரிப்பு உரிமம் இல்லாமல் இருந்த 40 டன் கருப்பட்டியை பறிமுதல் செய்தனர். அதோடு உணவு மாதிரி எடுக்கப்பட்டு உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புதுறை தூத்துக்குடி மாவட்ட நியமன அதிகாரி கருணாகரன் கூறும்போது, கலப்பட கருப்பட்டி புகாரைத் தொடர்ந்து, கருப்பட்டி, பனங்கற்கண்டு தாயாரிப்பாளர்கள் விற்பனையாளர்களுக்கு 2 முறை விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சீனி கலக்காத சுத்தமான பதனீரில் தாயாரிக்கப்படும் கருப்பட்டி மற்றும் கற்கண்டு என்று லேபிளில் குறிப்பிடவேண்டும். சீனி ஒரு சதவீதம் கலந்திருந்தாலோ, அது கலப்படமானது என அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்வதோடு, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பாதுகாப்பு சட்டப்படி கட்டாயம் உரிமம் எடுத்துதான் தொழில் செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு விதி மீறல் கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார். அரசின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை தொடர்ந்து, இதுநாள் வரை சீனி கலந்து மக்கள் வயிற்றில் அடித்து கொள்ளை லாபம் பார்த்து வந்த வியாபாரிகள் இனி தப்ப முடியாது. இனிமேலாவது கலப்படம் இல்லாத கருப்பட்டி கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்ப்போம்.
அதிகாரிகள் ரெய்டு தொடரவேண்டும்
காலப்பட கருப்பட்டி குறித்து உடன்குடி சிவலூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலருமான முருகேசன் கூறியதாவது: பதனீர் சீசன் ஆண்டுக்கு 3 மாதம்தான் இருக்கும். முன்பெல்லாம் உடன்குடி கருப்பட்டி இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் வரை பெயர் பெற்றிருந்தது. உடன்குடி கருப்பட்டிக்கு அப்படி என்ன சிறப்பு என்று உங்களுக்கு கேட்க தோன்றும். மற்ற இடங்களில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டியில் போதுமான இனிப்பு சுவை இருக்காது. ஆனால் உடன்குடி கருப்பட்டியில் காபி, டீ போட்டால் சுவையாகவும் தித்திப்பாகவும் இருக்கும். இங்குள்ள கிடைக்கும் பதனீரும் அமிர்தம் போல் இருக்கும். கருப்பட்டி தொழிலால் உடன்குடி உலக அளவில் தலை நிமிர்ந்து நின்றது. ஆனால் இன்று சில சுயநலவாதிகள் பண ஆசை பிடித்து அதில் சீனியை கலந்து விற்று வருகிறார்கள். இதனால் உடல் நலத்திற்கு எத்தனை கேடு வரும் என்று அவர்கள் எண்ணி பார்ப்பதில்லை. இதுபோன்ற கலப்பட கருப்பட்டி சாப்பிட்டால் நோய் வரும். எனவே கலப்படத்தை முற்றிலும் தடுக்க, அதிகாரிகள் தொடர்ந்து சோதனை போடவேண்டும் என்பதே கருப்பட்டி பயன்படுத்தும் மக்களின் கோரிக்கையாகும் என்றார்.
