×

கேரளாவில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்காவிட்டால் தலைமை செயலாளரே பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மராது நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை இடிப்பது தொடர்பான வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேரள அரசிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை உடனடியாக இடிக்காவிட்டால் கேரள தலைமை செயலாளரே பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசின் தலைமை செயலாளர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு நேரடியாக ஆஜரானார். அப்போது, பாதுகாப்பில்லாமல் கட்டப்பட்டுள்ள மரது கட்டிடத்தை உச்சநீதிமன்ற உத்தரவு படி இடிக்கவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கேரள அரசை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளதுள்ளது. கேரளாவில் மராது என்ற இடத்தில் 5 கட்டிடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளது. இது கடல்சார் ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரள நீதிமன்றம் இந்த கட்டிடத்தை உடனடியாக இடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிடத்தின் உரிமையாளர்கள், கட்டிடத்தில் வசிப்பவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கனவே  தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்ட போது, செப்டம்பர் 20ம் தேதிக்குள் 5 கட்டிடங்களையும் இடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே, கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த கட்டிடத்தை உச்சநீதிமன்ற உத்தரவின் படி, இடிக்கவிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும் இது தொடர்பாக கேரளா மாநிலத்தின் தலைமை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், அந்த உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி கேரள தலைமை செயலாளர் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசின் தலைமை செயலாளர் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மேலும், கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கட்டிடத்தை இடிப்பதற்கான டெண்டர் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அந்த கட்டிடத்தில் இருப்பவர்கள், தங்களது வீட்டை காலி செய்வதற்கு மறுத்து வருவதாக தெரிவித்தார். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிடத்தை இடிக்க முடியவில்லை என தெரிவித்தார். மேலும் கட்டிடத்தை இடிப்பதற்கு காலஅவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, கட்டிடத்தை இடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவை? , ஏன் இதுவரை கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டியது அரசின் கட்டாயம் என தெரிவித்தனர். ஏன் இந்த கட்டிடத்தை இடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, கட்டிடத்தை இடிக்கவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த கட்டிடத்தை இடிக்காவிட்டால் இதற்கு கேரள தலைமைச் செயலாளரே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இறுதி உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பிப்பதாக வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Chief Secretary ,Supreme Court ,buildings ,Kerala , Kerala, Violation, Building, Chief Secretary, Accountability, Supreme Court
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...