ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு தப்பிவிடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் பதில்மனு தாக்கல்!

டெல்லி: ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு தப்பிவிடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு என விளக்கமளித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இம்மனு மீதான விசாரணை செப்டம்பர் 23க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்தை அடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 19ம் தேதியன்று சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் திகார் சிறையில் ப.சிதம்பரம் மீண்டும் அடைக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது கடந்த 20ம் தேதியன்று விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவருக்கு எந்த சலுகையும் காட்டக் கூடாது என கூறிய சிபிஐ, இந்த வழக்கில் சிதம்பரம் பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பொதுப் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தால், ஊழல் வழக்குகளில் அது தவறான முன்னுதாரணத்தை வைத்துவிடும். பொது நம்பிக்கையை குலைக்கும் செயலாகவும் அது மாறும். மேலும், ஆதாரங்களை அழிக்கவும், வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லவும் வாய்ப்புள்ளது என சிபிஐ அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்து.

இதனையடுத்து 23ம்(இன்று) தேதி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வரவுள்ளநிலையில், சி.பி.ஐ. கூறியதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், எம்.பி., பொறுப்புமிக்க குடிமகனாகிய நான், ஜாமீன் கிடைத்தால் எங்கும் செல்ல மாட்டேன். ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு. எனது குடும்பம் பல ஆண்டுகளாக, பாரம்பரியமாக வசித்து வருகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை, என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Stories: