அருப்புக்கோட்டை உழவர்சந்தையில் அடிப்படை வசதி வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகள் விளைநிலத்தில் விளையும் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தொடங்கிய திட்டம் உழவர்சந்தை. அருப்புக்கோட்டையில் உழவர் சந்தை பழைய பேருந்துநிலையம் பகுதியில் உள்ளது. 72 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த உழவர்சந்தைக்கு அருப்புக்கோட்டை, சித்தலக்குண்டு, சிதம்பராபுரம், செட்டிகுறிச்சி, கண்டமங்களம், குல்லம்பட்டி, கல்லூரணி, தும்முசின்னம்பட்டி, தமிழ்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தினந்தோறும் பல்வேறு வகையான கீரை வகைகளும் உழவர்சந்தைக்கு வருகிறது. உழவர்சந்தையை நிர்வாக அதிகாரி, உதவி நிர்வாக அதிகாரி ஆகியோர் நிர்வாகம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகாலையிலேயே ஏராளமானோர் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். தினந்தோறும் 10 டன் வரை உழவர்சந்தைக்கு காய்கறிகள் வருகிறது.

ஆனால் இந்த உழவர்சந்தையில் உள்ள பெரும்பாலான கடைகள் சேதமடைந்து உள்ளது. கடையில் பதித்த எடை தராசுகளும் துருபிடித்து பராமரிப்பு இன்றி உள்ளன. தினந்தோறும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து செல்கின்றனர். இங்கு உழவர்சந்தை ஆரம்பிக்கப்பட்டபோது கழிப்பறை வசதி, கேன்டீன் வசதி இருந்தது. தற்போது கேன்டீன் வசதி இல்லை. இருந்த கழிப்பறையையும் இடித்து விட்டனர். இதனால் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையில் 5 ரூபாய் கொடுத்து தான் செல்ல வேண்டியுள்ளது. குடிக்க தண்ணீர் வசதி இல்லை. காய்கறி மற்றும் கீரைகளை சுத்தம் செய்வதற்கும் தண்ணீர் வசதி இல்லை. சின்டெக்ஸ் தொட்டி இருந்தும் காட்சிப்பொருளாக உள்ளது.

உழவர்சந்தை தொடங்கும் நேரத்தில் அதிகாலையில் விவசாய கிராமங்களிலிருந்து போக்குவரத்து வசதி கடந்த திமுக ஆட்சி காலத்தில் செய்து கொடுக்கப்பட்டது. விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளுக்கு பஸ்களில் சுமைக்கட்டணம் இல்லை. ஆனால் தற்போது இந்த திட்டம் நடைமுறையில் பின்பற்றப்படவில்லை. விவசாயிகளும் தாங்களாகவே வருகின்ற பேருந்துகளில் காய்கறிகளை சுமைக்கட்டணம் செலுத்தி ஏற்றிக்கொண்டு வருகின்றனர். உழவர் சந்தை கடைகள் மேற்கூரைகள் சேதமடைந்தும், கடையின் தரைத்தளம் பெயர்ந்தும் சிதிலமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் துப்புரவு செய்யாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. எனவே நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய உழவர்சந்தைக்கு தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி செய்து தரவும், சேதமடைந்த கடைகளை பராமரிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: