குடிநீருக்கு தண்ணீர் திறக்க மறுப்பு: பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் குடிநீர் பஞ்சம்

பழநி: பழநி அருகே பாலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் பாலசமுத்திரம் பேரூராட்சியில் வசிக்கும் 18 ஆயிரம் பேர் குடிநீரின்றி பரிதவித்து போய் உள்ளனர். பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 18 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு பாலாறு அணையில் இருந்து உரைகிணறு மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. இப்பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்கு சுழற்சி முறையில் நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பாலாறு அணையில் இருந்து உறை கிணறுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் உறை கிணற்றில் தண்ணீர் உற்பத்தியாகும்.

உறைக் கிணற்றில் இருந்து பேரூராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறையினரால் குடிநீருக்காக திறந்து விடப்பட வேண்டிய உபரிநீர் அணையில் இருந்து திறந்து விடப்படவில்லை. இதனால் உறைகிணறு வறண்டுபோய் விட்டது. உறைகிணறு வறண்டு போனதால் கடந்த பாலசமுத்திரம் பேரூராட்சி நிர்வாகத்தால் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீரின்றி இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ரஞ்சித் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் சுமார் 18 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். குடிநீரை விலைக்கு வாங்க முடியாத ஏழை விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களே அதிகளவு வசிக்கின்றனர்.

தண்ணீருக்காக தோட்டத்து கிணறுகளை நோக்கி பல கிலோமீட்டர் தூரம் அலைந்து திரிய வேண்டி உள்ளது. பழநி நகருக்கு குடிநீர் எங்கள் கிராமத்தில் உள்ள பாலாறு அணையில் இருந்தே கொண்டு செல்லப்படுகிறது. அனால், எங்கள் கிராமத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து உத்தரவு வந்தால்தான் தண்ணீர் திறப்போம் என்று அடம்பிடிக்கின்றனர். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் உறைகிணறுக்கு வரும் வழியில் பல விவசாயிகள் மோட்டார் வைத்து உறிஞ்சிக் கொள்கின்றனர். இதுதொடர்பாக முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்தாண்டு சப்-கலெக்டர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு, குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ஆனால், தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் அக்கறை காட்டுவதில்லை. தண்ணீர் கிடைக்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டியதிருக்கும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தண்ணீர் திறக்கும் முடிவு மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளே எடுத்து வந்தனர். தற்போது சென்னை தலைமை செயலக அதிகாரிகளிடம் உத்தரவு பெற வேண்டி உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து உத்தரவு வந்தவுடன் தண்ணீர் திறக்கப்படும். குடிநீருக்கு திறந்து விடப்படும் தண்ணீரை உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: