துணைமுதல்வர் தொகுதியில் தான் இந்த துயரம்: போடி அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு

போடி: தமிழக துணைமுதல்வர் தொகுதியான போடியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். போடி - மூணாறு சாலையில் 1967ம் ஆண்டு ஏப்.28ம் தேதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் சாதிக்பாட்ஷா போடி அரசு பொது மருத்துவமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து 52 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில் தற்போது தினமும் 1400க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி உள்பட 14 டாக்டர்களும், கடைநிலை ஊழியர்கள் சுமார் 80 பேர்கள் பணியில் உள்ளனர்.

இந்த மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல புதிய கட்டிடங்கள், நோயாளிகளுக்கு படுக்கை அறைகள் என தனியார் மருத்துவமனைக்கு நிகராக மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனை தனுஷ்கோடி - கொச்சி தேசிய நெடுஞ் சாலையில் இருப்பதால் குரங்கணி மற்றும் போடிமெட்டு சாலைகளில் வாகன விபத்தில் சிக்குபவர்களும், தீவிபத்துகளில் சிக்குபவர்களின் உயிர் காக்கும் நிலையில் உள்ளது. இதனால் மின்சாரம் என்பது 24 மணி நேரமும் இருக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டும். அதற்கான ஊழியர்களும் இருக்க வேண்டும். ஆனால் போடி அரசு மருத்துவமனையில் இப்பணிக்கு பணியாளர்கள் இல்லை. மின்சாரம் அடிக்கடி கட்டாகும் போதும், மரக்கிளைகள் முறிந்து வயர்களில் படும்போதும் மின்தடை ஏற்படுகிறது. அப்போது மருத்துவப்பணிகள் முடங்குகிறது.நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மின்தடை இரவு நேரம் ஏற்பட்டால் நோயாளிகள் கடும் அவதிடையும் நிலை உள்ளது. வெளியில் ஆட்களை தேடி பிடித்து மின்சார துண்டிப்பினை சரி செய்கின்றனர். இதுகுறித்து பொதுப்பணிதுறையிடம் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துகின்றனர். கடந்த 16ம் தேதி போடிமெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து இருவர் பலியாகி 20 பேர் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமம் அடைந்தனர்.

இறந்தவர்களின் உடலை பிணவறையில் வைக்க செல்லும் போது அறையிலும், வெளி வளாகத்திலும் மின்சாரம் இல்லாமல் கும்மிருட்டாக இருந்ததால் பொதுமக்களும், மருத்துவமனை ஊழியர்களும் அவதியடைந்தனர். இதன் பின் வெளியிலிருந்து மின்விளக்கு வரவழைத்து வளாகத்தில் பொருத்தி சமாளித்தனர். இதே போல 2018ம் ஆண்டு மார்ச் 11ம்தேதி குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் பலியான சம்பவத்தின் போதும். போடி மருத்தவமனையில் மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உயிர் காக்கும் போடி அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போடி அரசு மருத்துவமனைக்கு நேரடியாக டிரான்ஸ்பார்மர் பொருத்தி மின் துண்டிப்பு இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும். இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான். பலமுறை முதல்வர் பொறுப்பில் இருந்தும் அவர் இந்த மருத்துவமனையைக் கண்டு கொள்வதில்லை’’ என்று கூறினர்.

Related Stories: