கோத்தகிரி அருகே செப்டிக் டேங்க் குழியில் காட்டு மாடு விழுந்து பலி

ஊட்டி: கோத்தகிரி அருகே மிளிதேன் பகுதியில் செப்டிக் டேங்க் குழியில் விழுந்து பெண் காட்டுமாடு இறந்தது. கோத்தகிரி அருகேயுள்ள மிளிதேன், லில்லியட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க குழி தோண்டப்பட்டு கான்கீரிட் வளையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதனை முறையாக மூடவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அப்பகுதியில் காடுமாடு சத்தம் கேட்டு வந்து அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதில் காட்டுமாடு ஒன்று கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பல மணி நேர தாமதத்திற்கு பின் காலை 9 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றன வனத்துறையினர், கழிவுநீர் தொட்டியில் சிக்கிய பெண் காட்டுமாட்டினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குறுகலான கான்கீரிட் வளையங்கள் என்பதால் அதில் சிக்கியிருந்த காட்டுமாட்டை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தொடர்ந்து ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு தொட்டியை உடைத்து அதனை மீட்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் காட்டு மாடு  பரிதாபமாக உயிரிழந்தது.  இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மிளிதேன் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் சிக்கி உயிரிழந்த காடுமாடை ஜே.சி.பி., வரவழைக்கப்பட்டு இன்று அதன் உடல் மீட்கப்படும். கழிவுநீர் தொட்டி, பள்ளங்கள் தோண்டுபவர்கள் உடனுக்குடன் அவற்றை மூடி விட வேண்டும். இல்லாதபட்சத்தில் இதுபோன்று வன விலங்குகள் விழுந்து உயிரிழக்க கூடிய சூழல் உள்ளது, என்றனர்.

Related Stories: