×

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட 4 பேர் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட 4 பேர், புதிய நீதிபதிகளாக இன்று பதவியேற்றுள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள வி.ராமசுப்ரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரவீந்திர பட் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, புதிய நீதிபதிகள் நால்வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றுள்ளனர். அவர்கள் நால்வருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்துவைத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கையை 31 இருந்து 34 ஆக உயர்த்தி, மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. நேற்று வரை, தலைமை நீதிபதி உள்பட 30 நீதிபதிகள் பணியில் இருந்த நிலையில், புதிய நீதிபதிகளின் நியமனம் மூலம் இந்த எண்ணிக்கை இன்று 34 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள நிலையில், வி.ராமசுப்பிரமணியன் பதவியேற்றதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை உச்சநீதிமன்றத்தில் இரண்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : judges ,Supreme Court ,V. Ramasupramaniyan , Supreme Court, Justice, sworn in, V. Ramasupramaniyan, Chief Justice
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...