×

தமிழை வாசிக்க தடுமாற்றம், அடிப்படை கணக்குகளில் பின்னடைவு: அரசு பள்ளிகளில் அறிமுகமாகும் விளையாட்டு முறை கல்வி

சேலம்: 20 கிராமப்புற பள்ளிகளில் நடந்த முன்னோட்ட ஆய்வில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்ததால், விளையாட்டு முறை கல்வியை, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாணவர்கள் குறித்து, `பிராத்தம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டும் தமிழகத்தின் மதுரை உள்பட நாடு தழுவிய ஆய்வினை மேற்கொண்டது. கிராமப்புற பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு அதிர்ச்சி முடிவுகள் கிடைத்தன. குறிப்பாக, மாணவர்களின் தமிழ் மொழி வாசிப்புத்திறன் மிகவும் பின்தங்கி இருந்தது. அதாவது, 5ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 50 சதவீதம் பேர், 2ம் வகுப்பு புத்தகங்களை கூட வாசிக்க முடியாத நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. இதேபோல், பணத்தை எண்ணுவது, செலவிடுவது, மீத தொகையை பெறுவது என பணம் சார்ந்த நடவடிக்கைகளிலும் மாணவர்களின் திறன் மிகவும் பின்தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சேலம் மாவட்டத்தில் இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் அடைவுத்திறன் குறைந்த 20 பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அதன் விரிவுரையாளர்கள் ரமேஷ்குமார் மற்றும் மான்விழி ஆகியோர் மேற்கொண்டனர். தேசிய அளவிலான ஆய்வினை போலவே, சேலம் மாவட்டத்திலும் முடிவுகள் வேதனையாக அமைந்தது. அதாவது, தமிழை பொறுத்தவரை ஒன்றை எழுத்து, கோர்வை எழுத்துக்கள், வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை படிப்பதில் மாணவர்கள் பெரும் சிரமங்களை சந்திப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஒன்றை எழுத்தை கூட தெரியாத நிலையில் மாணவர்கள் இருந்தனர்.

இதேபோல், கணிதத்தை பொறுத்தவரை கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற அடிப்படையிலும் பல சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக, 50 சதவீத மாணவர்களுக்கு, கடன் வாங்கி கழித்தல் பற்றி தெரியாமலும், 40 சதவீத மாணவர்களுக்கு தொடர் கணக்குகளை புரிந்து கொள்ள முடியாமலும் தவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், இந்த நிலையை மாற்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மட்டும் விளையாட்டு முறை கல்வி அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஆசிரியர் என தேர்வு செய்து அவர்களுக்கு, விளையாட்டு முறை கல்வி குறித்து பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், இப்பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நாள்தோறும் மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, தமிழ் மற்றும் கணித பாடங்களை விளையாட்டு முறையில் கற்பித்தனர். இதனால், மாணவர்களின் படிப்பு மீதான ஆர்வம் அதிகரித்தது. பயிற்சியின் முடிவில், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மற்றும் அவர்களிடம் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில், முன்பை விட கற்றல் திறன் அதிகரித்துள்ளது உறுதிசெய்யப்பட்டது. இதனால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், இதே நடைமுறையை அனைத்து அரசு பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கூறுகையில், “தேசிய அளவில் பிராத்தம்’ அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு மிகவும் அதிர்ச்சியளித்ததால், நமது மாவட்டத்தில் இதேபோல் ஒரு ஆய்வினை மேற்கொள்ள முடிவு செய்தோம். இங்கும் அதே நிலையில் மாணவர்கள் இருந்தது வேதனை அளித்தது. இதனையடுத்து மாற்றுமுயற்சியாக, விளையாட்டு முறை கல்வியை ஊக்குவித்தோம். இதன் முடிவு, எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது. மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இந்த முறை கல்விக்கு மிகுந்த ஆதரவளித்தனர்.

கடந்த கல்வியாண்டிற்கு சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டாலும், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் நடப்பாண்டும் அதனை செயல்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் முதல் ஒருமணிநேரம் இந்த முறையில் பயிற்றுவித்துவிட்டு, பின்னர் அன்றாட பாடங்களை நடத்துகின்றனர். இதனையடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் இதனை விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியாக பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றனர்.

பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே அமல்

அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கற்றலில் இனிமை என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி வழங்கப்பட்டது. இதில், மாணவனிடம் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வாய்ப்பில்லாமல் போனது. ஆனால், இந்த புதிய விளையாட்டு முறை கல்வியானது, ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி, அவனுக்கு என்ன தேவை என்பதை மையப்படுத்தி பயிற்றுவிக்கும் முறையாகும். இதனால், ஒவ்வொரு மாணவனும் அவனின் தனிப்பட்ட நிலையிலிருந்து முன்னேற்றம் அடைந்திருப்பதை கண்கூடாக காணமுடிகிறது. ஏற்கனவே, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் என பல மாநிலங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் இதனை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேசிய அளவில் நடந்த ஆய்வின் முடிவுகள்:

6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் 95% பேர் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
2018ம் ஆண்டில், பள்ளிக்கு வெளியே உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 4.1% ஆக குறைந்துள்ளது.
3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 27.2% பேர் மட்டுமே 2ம் வகுப்புக்கான வாசித்தல் திறனை கொண்டுள்ளனர்.
இதேபோல், 5ம் வகுப்பு படிப்பவர்களில் 50.3% பேரும், 8ம் வகுப்பு படிப்பவர்களில் 73% பேரும் மட்டுமே, 2ம் வகுப்புக்கான வாசித்தல் திறனை கொண்டுள்ளனர்.
3ம் வகுப்பு படிக்கும் 20.9% மாணவர்களால் மட்டுமே கழித்தல் கணக்குகளை செய்ய முடிகிறது.
5ம் வகுப்பு படிக்கும் 27.8% மாணவர்களால் மட்டுமே, வகுத்தல் கணக்குகளை செய்ய முடிகிறது.
8ம் வகுப்பு படிக்கும் 4.4% மாணவர்களால் மட்டுமே, மூன்று இலக்க எண்ணை, ஒன்றை இலக்க எண்ணால் வகுக்கும் கணக்கை செய்ய முடிகிறது.

பயிற்சியை காண கியூஆர் கோடு

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு முறை கல்வி மாணவர்கள் பயிலும் நடவடிக்கைகளில் சில வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பிரத்யேக கியூஆர் கோடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஸ்கேன் செய்தால், விளையாட்டு முறை கல்வி தொடர்பான அனைத்து வீடியோக்களை காணலாம்.

Tags : Government Schools , Game Method Education
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...