×

அறிவித்தால் மட்டும் போதுமா; நிதி ஒதுக்க வேண்டாமா? திணறலில் தென்மாவட்டத் திட்டங்கள்

மதுரை: சேது சமுத்திர கால்வாய் 14 ஆண்டுகள் கடந்தும் மீள முடியாமல் அரசியல் புயலில் சிக்கிய நிலையில், தென்மாவட்ட வளர்ச்சியின் தேக்க நிலை மாறுவதற்கு கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்), கிழக்கு கடலோர ரயில் பாதை திட்டங்கள் கை கூடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்தமிழக வளர்ச்சிக்கு உருவான பல்வேறு மெகா திட்டங்கள் உருக்குலைந்து காணாமல் போவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக 150 ஆண்டுகள் கனவாக நீடித்த சேது சமுத்திர கால்வாய் திட்டம் 2005ம் ஆண்டு மதுரையில் அடிக்கல் நாட்டி நடுக்கடலில் பணிகள் தொடங்கின. திட்டமிட்டபடி நிறைவேறி இருந்தால் சேது கால்வாயில் 2008 முதல் கப்பல் ஓடத்தொடங்கி இருக்க வேண்டும். தொழில் முதலீடுகள் குவிந்து வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கும்.

ஆனால் கால்வாய் பாதி தூரம் தோண்டிய நிலையில் அரசியல் புயலில் சிக்கி 14 ஆண்டுகள் கடந்தும் மீள முடியாமல் தடைபட்டு நிற்கிறது. திட்டத்துக்கு தடைவாங்கியவர்கள் கோரியபடி அந்த கடல்பகுதி புராதனச் சின்னமாகவும் அறிவிக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் சேது திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து 5 ஆண்டுகளாகியும், விமோச்சனம் பிறக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரூ.27 ஆயிரத்து 570 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு, அதுவும் கடல்நீரில் கரைகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திட்டங்கள் ஏமாற்றம் அளித்தது. இதன் விளைவு, தென்தமிழகத்திற்கு வரக் காத்திருந்த தொழில் முதலீடுகள் திசைமாறி போயின.

கடலில் உருவான திட்டங்கள் கலைந்து நிற்கும் நிலையில், கடற்கரை ஓரமாக தரையில் உருவான திட்டங்களாவது, கனவாக கலைந்து போகாமல் கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தத் திட்டங்களின் விவரம் வருமாறு:
* சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி, வேதாரண்யம், தொண்டி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ஓரமாக நான்கு வழிச்சாலைத் திட்டம் ‘கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்)’ ரூ.10 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் என 2015ல் மத்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே இப்பாதையில் மாநில அரசின் இருவழிச்சாலை ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை உள்ளது. இதை தேசிய நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்து, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை புதிய சாலை அமைக்க வேண்டும். இத்திட்டம் கை கூடாமல் நிற்கிறது. இத்திட்டம் நிறைவேறினால், தற்போது சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 750 கிமீ தூரம் அமைந்துள்ள தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நெருக்கடி 40 சதவீதம் குறைந்து விடும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

* சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் உருவாக்கி கடலோரமாக ரயில் போக்குவரத்தும், கடல் நீர்வழி போக்குவரத்தும் உருவாக்கப்படும் என 2015ல் மத்திய அரசு அறிவித்தது. இதில் நீர்வழி போக்குவரத்து இப்போதைக்கு சாத்தியமில்லை என நிராகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை ரயில் போக்குவரத்து சாத்தியம் இருந்தும் இழுத்தடிக்கப்படுகிறது. இந்த ரயில் பாதையின் மொத்த தூரம் 1002 கிமீ என்றாலும், இதில் 55 சதவீதம் ஏற்கனவே ரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது. 45 சதவீதம் தூர பணி நிதி ஒதுக்கீடின்றி இடையில் நிற்கிறது. புதிதாக காரைக்குடியில் இருந்து தேவகோட்டை, திருவாடானை, தொண்டி, ராமநாதபுரம், கீழக்கரை, சிக்கல், சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், உவரி வழியாக குமரி வரை பாதை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் தூங்குகிறது.

போக்குவரத்து ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘சென்னை முதல் மதுரை வரை இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்தும், தேஜஸ் என்ற ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் மட்டுமே கூடுதலாக ஓடுகிறது. மதுரை - குமரி இடையிலான இரட்டை ரயில் பாதை பணி எப்போது முடிவடையும் என்பதே கேள்விக்குறியாக நீடிக்கிறது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சென்று திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பஸ் பயணங்களுக்கும் இடமின்றி மக்கள் பரிதவிக்கிறார்கள். கிழக்கு கடற்கரை பாதையில் ரயில், பஸ்கள் ஓடினால், பயண நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்’’ என்கின்றனர்.
தொழில் முதலீட்டாளர்கள் கூறும்போது, ‘‘சேது சமுத்திர திட்டம் கைகூடாத நிலையில் இசிஆர், கடற்கரை ரயில் திட்டங்களாவது கைகூடி வருமா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. இந்த கடலோர வழித்தடத்தில் மகாபலிபுரம், புதுச்சேரி, நாகை, வேதாரண்யம், ராமேஸ்வரம். தூத்துக்குடி, திருச்செந்தூர். கன்னியாகுமரி ஆன்மீக சுற்றுலா ரீதியிலான தொழில் முதலீடு அதிகரித்து, வேலைவாய்ப்புகள் பெருக வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகள் உலக அளவில் முதலீட்டாளர்களை அழைத்து வந்தாலும், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க தவறினால் தொழில் வளர்ச்சியை எட்ட முடியாது’’ என்கிறார்கள்.

தீபாவளிக்கு கட்டண கொள்ளை?

சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தேவையான அளவுக்கு ரயில்கள் இல்லாததால், தீபாவளிக்கு ரயில் மற்றும் அரசு பஸ்களில் டிக்கெட் ரிசர்வேஷன் முடிந்தது. ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டண கொள்ளைக்கு தயாராகி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Tags : announcement ,Sethu Samudra Canal ,Madurai , Sethu Samudra Canal, Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...