நாங்குநேரி இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினர் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள்: நெல்லை ஆட்சியர்

நெல்லை: நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கூறியுள்ளனர். அதன் விபரம் :

* தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தலாம்.

* நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை வெள்ளம், வறட்சி, இயற்கை பேரழிவுகள் காலங்களில் ஏற்படும் கொள்ளை நோய் போன்றவற்றின் தடுப்பு நடவடிக்கைகள் தொடரலாம்.

* மோசமான நோயினால் அவதிப்பட்ட நபர்களுக்கு பணம் அல்லது மருத்துவ வசதிகள் வழங்குவதற்கு உரிய அனுமதியுடன் நடவடிக்கை தொடரலாம்.

* பொது மைதானங்களில் தேர்தல் கூட்டங்களை நடத்துவதற்கு வேட்பாளர்களுக்கும், போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்கும் பாரபட்சமின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும். ஹெலிகாப்டர்களை பயன்படுத்த அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமற்ற வகையில் வசதி இருக்க வேண்டும்.

* பிற அரசியல் கட்சிகளின் கொள்கைகள், திட்டம், கடந்த கால சாதனைகள் மற்றும் பணிகளை மட்டுமே விமர்சித்தல் வேண்டும்.

* அமைதியான மற்றும் குழப்பமில்லாத குடும்ப வாழ்க்கை தொடர்பான ஒவ்வொரு நபரின் உரிமையும் பிரசாரத்தின்போது முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.

* கூட்டம் நடத்துவதற்கு இடம் மற்றும் நேரம் தொடர்பாக உள்ளுர் காவல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

* பொதுக்கூட்டம் நடத்தப்படும் இடங்களில் ஏதேனும் தடையாணை இருப்பின் அதை மதித்து பின்பற்ற வேண்டும்.

* கூட்டம் நடத்தப்படும் இடத்தில் ஒலிபெருக்கிகள் அல்லது வேறு வசதிகளையும் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்.

* கூட்டம் நடத்தப்படும் இடங்களில் தொந்தரவு மற்றும் இடையூறு செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையின் உதவியை பெற வேண்டும்.

* ஊர்வலம் ஆரம்பிக்கும் நேரம் மற்றும் இடம், பின்பற்ற வேண்டிய வழி மற்றும் ஊர்வலம் முடியும் நேரம் மற்றும் இடம் குறித்து முன்கூட்டியே முடிவு செய்து போலீஸ் அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

* ஊர்வலம் நடைபெறும் இடங்களில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு உத்தரவுகளை முழுமையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். அனைத்து போக்குவரத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.

* ஊர்வலத்தின் வழிப்பாதை போக்குவரத்திற்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும்.

* தேர்தலை நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்துவதற்கு அரசு அலுவலர்களுக்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* சிவிஜில் என்ற இணையதள செயலி மூலமாக தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்

* பிரசார காலம் மற்றும் வாக்கெடுப்பு நாளில் வாகன கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

* வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தேர்தல் வாக்குப்பதிவு முகவர்கள் தவிர தேர்தல் கமி‌ஷனிலிருந்து குறிப்பிட்ட அதிகார அனுமதி பெற்ற நபர்கள் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர், மண்டல அலுவலர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியும்.

* தேர்தல் நடத்தை பற்றிய எந்த புகாரும் அல்லது பிரச்சினையும், தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், மண்டல வட்டாட்சியர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

* தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் உத்தரவு, அறிவுறுத்தல்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் தேர்தலின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய அனைத்து வி‌ஷயங்களிலும் கீழ்படிந்து நடக்க வேண்டும்.

* தொகுதி சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது வேட்பாளர் அல்லது வேட்பாளரின் தேர்தல் முகவர்கள் தவிர மற்ற நபர்கள் பிரசார காலம் முடிந்தவுடன் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

* தேர்தல் பிரசார வாகன அனுமதி மற்றும் தடையில்லாச்சான்று பெறுவதற்கு சுவேதா செயலி மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் இது தொடர்பான தடையின்மை சான்று 24 நேரத்திற்குள் வழங்கப்படும்.

* கட்சி அரசாங்கத்தின் சாதனைகள் தொடர்பாக எந்தவொரு விளம்பரமும் அரசு செலவில் செய்யக்கூடாது.

* வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணுமிடம் ஆகியவற்றினுள் அமைச்சர்கள் எவரும் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. வேட்பாளர் மற்றும் வாக்காளராக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

* தேர்தல் பிரசாரத்தின்போது அலுவலக பணி எதையும் சேர்க்கக்கூடாது.

* வாக்காளர்களுக்கு பணம் வழங்குதலோ அல்லது பணம் வழங்குவதாக உறுதிமொழி அளிக்கவோ கூடாது.

* சாதி, மத உணர்வுகளை தூண்டும் விதமாக வாக்காளரிடம் பிரசாரம் செய்யக்கூடாது.

* சாதி, மத மொழி வேறுபாடுகளை அதிகரிக்கும் வகையிலோ அல்லது பிரச்சினை ஏற்படுத்தும் வகையிலோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது.

* மாற்று கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது.

* மற்ற கட்சிகள் அல்லது அவற்றின் தொண்டர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விமர்சனம் செய்யக்கூடாது.

* கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் எந்தவொரு வழிபாடு இடங்களையும் தேர்தல் பிரசாரத்திற்கான இடமாக பயன்படுத்தக்கூடாது.

* வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தல், மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களின் ஆதரவு கோருதல் தடை செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் 48 மணி நேரத்திற்கு முன்னர் பொதுக்கூட்டங்கள் ஏதும் நடத்துதல் கூடாது.

* தனி நபர்களின் வீடுகளுக்கு முன் எவ்வித ஆர்ப்பாட்டங்களோ போராட்டங்களோ நடத்தக்கூடாது.

* தனி நபருடைய நிலம், கட்டிடம், மதில் சுவர் முதலியவற்றில் கொடிக்கம்பங்கள் நடுதல், விளம்பரத் தட்டிகள் தொங்க விடுதல், சுவரொட்டி ஒட்டுதல், சுவர் விளம்பரம் போன்றவைகள் உரிமையாளரின் அனுமதியின்றி செய்யக் கூடாது.

* ஒரு கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில், பிற அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் எவ்வித இடையூறு செய்யக்கூடாது.

* ஒரு கட்சியின் கூட்டம் நடைபெற்றுவரும் இடத்தின் வழியாக மற்றொரு கட்சியின் ஊர்வலம் நடத்தக்கூடாது.

* ஊர்வலங்கள் நடத்தும்போது அதில் பங்குபெறுபவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக எவ்வித ஆயுதங்களை எடுத்துக் செல்லக்கூடாது.

* ஒரு கட்சி ஒட்டுகிற சுவரொட்டிகளை மற்றொரு கட்சி அகற்றக்கூடாது.

* தேர்தல் நாளன்று தேர்தல் நடைபெறும் இடத்திற்கு அருகே கொடிகளோ சின்னங்களோ தேர்தல் பிரசாரம் செய்யும் வகையிலான சாதனங்களோ வைக்கக்கூடாது.

* தேர்தல் பிரசார நாட்களில் காலை 6 மணிக்கு முன்னரோ இரவு 10 மணிக்கு பின்னரோ வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்யக்கூடாது.

* பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலத்தின்போது ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி பெறவேண்டும். மேற்படி கூட்டங்கள் இரவு 10 மணிக்கு பின்னர் நடத்தக்கூடாது.

* தேர்தலின்போது மதுபானங்கள் விநியோகம் செய்யக்கூடாது. மதுபான கடைகளில் கட்சி ஆதரவாளர்களுக்கு மதுபானம் அருந்த எந்தவிதமான டோக்கன் விநியோகம் செய்யக்கூடாது.

* வாக்கெடுப்பு நாளில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உட்பட்ட நபர் தமது காவலர்களுடன் வாக்குச்சாவடிக்கு அருகே நடமாடக்கூடாது.

* பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உட்பட்ட நபர் தமது காவலர்களுடன் நடமாட வேண்டியுள்ளதால், அன்னாரை வாக்குச்சாவடி முகவராகவோ வாக்கு எண்ணும் அறையில் முகவராகவோ நியமனம் செய்யக்கூடாது.

Related Stories: