7 மணி நேர பயணம் செய்யும் நிலையில் கழிப்பறை வசதியின்றி இயங்கும் மன்னார்குடி-மானாமதுரை ரயில்

திருச்சி: தொடர்ந்து 7 மணி நேரம் பயணம் செய்யும் மன்னார்குடி-மானமதுரை ரயிலில் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து மானாமதுரைக்கு (வண்டி எண் 76805) பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு மானாமதுரை சென்றடைகிறது. இந்த ரயிலில் மொத்த பயண நேரம் 6 மணி 50 நிமிடம் ஆகும். இந்த ரயில் நீடாமங்கலம், கோவில்வெண்ணி, அம்மாபேட்டை, சாலியமங்கலம், குடிக்காடு, தஞ்சாவூர், ஆலக்குடி, பூதலூர், அய்யனாபுரம், சோழகம்பட்டி, தொண்டமான்பட்டி, திருவெறும்பூர், பொன்மலை, திருச்சி, குமாரமங்கலம், கீரனூர், வெள்ளனூர், புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கோட்டையூர், காரைக்குடி ஜங்ஷன், தேவகோட்டை ரோடு, கல்லல், பனங்குடி, சிவகங்கை, மானாமதுரை ஜங்ஷன் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.

6.50 மணி இயக்கப்படும் இந்த பயணிகள் ரயிலில் உள்ள கோச்சுகளில் கழிப்பறை வசதி கிடையாது. இதனால் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட உபயோகிப்பாளர் இயக்க தலைவர் மகேஸ்வரன் கூறுகையில், சுமார் 7 மணி நேரம் பயண நேரமாக உள்ள இந்த ரயிலில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தராத திருச்சி மண்டல ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கிறோம். இது நுகர்வோர்களை நேரடியாக பாதிக்கக்கூடிய செயலாக உள்ளது. இது குறித்து ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். பதில் கிடைத்தவுடன் அதற்கு ஏற்றபடி நடவடிக்கை எடுப்போம். அடுத்த கட்டமாக இந்த பயணிகள் ரயிலில் கழிப்பறை வசதி ஏற்படுத்திட ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்திடவும் முடிவெடுத்துள்ளோம் என்றார்.

Related Stories: