இந்தி மொழிக்கு ஆதரவாக பேசிய பஞ்சாப் பாடகர் குர்தாஸ்மானின் உருவபொம்மை எரித்து சீக்கியர்கள் போராட்டம்

பஞ்சாப்: இந்தி மொழிக்கு ஆதரவாக பேசிய பஞ்சாபி பாடகர் குர்தாஸ்மானை கண்டித்து பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை அறிவிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சி தலைவருமான அமித்ஷா அண்மையில் கூறியிருந்தார். இவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு பலதரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக அரசாங்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி இந்தியாவை நகர்த்தி கொண்டிருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. நாட்டை ஒன்றிணைக்க கூடிய ஒரே மொழி இந்தி தான் என்பதால், அதனை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியிருந்தார்.

அவரது பேச்சுக்கு தமிழகம், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் இவரது கருத்துக்கு அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பிறகு போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வட மாநிலங்களிலும் இந்திக்கு எதிர்ப்பு வலுபெற்று வருகிறது. இந்திக்கு ஆதரவாக கனடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடகர் குர்தாஸ்மான் பேசினார். இதனால் பஞ்சாபி மொழி பேசும் சீக்கியர்கள் குர்தாஸ்மானை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜலந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் குர்தாஸ்மான் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். அதேபோல் கனடாவில் உள்ள சீக்கியர்களும்  பாடகர் குர்தாஸ்மானை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: