×

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு: ஆதரவு வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் பேட்டி

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து   விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தால் கடந்த மாதம் 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் சிபிஐ அவரை கைது செய்தது. 4 முறை சிபிஐ காவலில் வைத்து   விசாரிக்கப்பட்ட பின்னர் கடந்த 5ம் தேதி 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு திகார் சிறையின் 7வது பிளாக்கில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் கடந்த 19-ம் தேதி பிற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின்   கூடுதல் சொலிசிட்டர் துஷார்மேத்தா வாதத்தில், ப.சிதம்பரத்தின் உடல்நிலையில் சிபிஐக்கும் அக்கறை உண்டு. அதனால் இந்த விவகாரத்தில் அவர்களது குற்றச்சாட்டை ஏற்கமுடியாது’’ என வாதிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தங்களது வாதத்தில், வயது முதிர்வை கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனை நடத்தவும்  நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், “ப.சிதம்பரத்திற்கு வரும் அக்டோபர் 3ம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுகிறது. இதையடுத்து ப.சிதம்பரம் உடனடியாக போலீசாரால் திகார்  சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று காலை 9.30 மணியளவில் காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து  பேசினர். ப. சிதம்பரம் எதிர்கொண்டு வரும் வழக்கு விசாரணை விவகாரத்தில் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவிக்கும் விதமாக இருவரும் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ப. சிதம்பரத்தை சந்திப்பதற்கு அவரது  மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் திகார் சிறைக்கு வந்திருந்தார்.

கார்த்தி சிதம்பரம் பேட்டி:

தந்தை ப.சிதம்பரம் திகார் சிறையில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், எனது தந்தை & எனது குடும்பத்தினர் மிகவும் நன்றியுள்ளவர்களாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர்  டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று அவரை சந்தித்ததற்காகவும், தங்கள் ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார். இந்த அரசியல் போராட்டத்தில் இது எங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.


Tags : Sonia Gandhi ,Karthi Chidambaram ,Manmohan Singh ,Chidambaram ,Tihar jail , Karthi Chidambaram interviews Sonia Gandhi and Manmohan Singh
× RELATED மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று...