பிரிட்டனை சேர்ந்த பிரபல பயண ஆலோசனை மற்றும் ஏற்பாடு நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிப்பு: 178 ஆண்டுகள் பழமைவாய்ந்தது!

மான்செஸ்டர்: பிரட்டனைச் சேர்ந்த 178 ஆண்டுகள் பழமையான பிரபல பயண ஆலோசனை மற்றும் ஏற்பாடு நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பிரிட்டனின் புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனமாக தாமஸ் குக் இருந்து வந்தது. பிரிட்டனின் அடையாளமாக கருதப்படும் இந்த நிறுவனம் கடந்த 1841ம் வருடம் தாமஸ் குக் என்னும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவரால் அவர் பெயரில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பிரிட்டனில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் சுற்றுலா செல்ல பயணிகளுக்கு ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கான வசதிகளைச் செய்து வந்தது.

அதன் பிறகு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உள்ள உலக நாடுகள் எனத் தனது சேவையை விரிவாக்கியது. தாமஸ் குக் நிறுவனம் தனது சொந்த விமான சேவைகளையும் நடத்தி வந்தது. இந்நிலையில், இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்நிறுவனத்துக்கு 25 கோடி டாலர்(22.7 கோடி யூரோ) நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து மேலும் முதலீட்டைப் பெற அந்நிறுவனம் கடும் முயற்சி செய்து வந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறாததால் தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இதனால் இந்த நிறுவனம் மூலம் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்திருந்த 1.5 லட்சம் பயணிகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.  இதில் பிரிட்டனுக்குப் பயணம் செய்துள்ள 1 லட்சம் பயணிகள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பச் செல்ல பிரிட்டன் அரசு உதவியை நாடியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 22,000 ஊழியர்கள் திடீரென பணி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 9000 ஊழியர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், விமான நிறுவனத்தின் இந்நிலையைத் தொடர்ந்து 14 நாள் காலத்திற்குள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் பயணிகளை திருப்பி அனுப்புவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: