போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரே ரசீதில் இருவர் பெயரிட்டு தனித்தனியே அபராதம் வசூல்

திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையம் போலீசார் மோட்டார் வாகன சோதனையின்போது ஒரே ரசீதில் 2 பேருக்கு அபராதத் தொகை எழுதிக்கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் 15.வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டியிலிருந்து செட்டிபாளையம் செல்லும் ரோட்டில் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  ஹெல்மெட் அணியாமல் ரகுபிரசாத் என்பவர் பைக்கில் வந்துள்ளார். அவரை காவலர் நண்பர்கள் குழு ஒன்று மடக்கி பிடித்தனர். பின்னர் அங்கிருந்த காவலர் ஒருவர் அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளார். பின்னர் அதே ரோட்டில்  ஹெல்மெட் அணியாமல் வந்த கருப்புசாமி என்பவரையும் பிடித்தனர். இந்நிலையில், ரசீதுகள் பற்றாக்குறையாக உள்ளதாக கூறி, ரகுபிரசாத்தின் அபராத ரசீதை வாங்கி கருப்புசாமிக்கும் அதே ரசீதில் அபராதத் தொகையை எழுதிக் கொடுத்துள்ளார். இந்த ரசீதின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.   

 இதுகுறித்து ரகுபிரசாத்திடம் கேட்டபோது, ‘ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை பிடித்து அபராதம் விதித்தார்கள். எனக்கு ராமு என்னும் போலீசார் ரசீதை கொடுத்தார். பின்னர் ரசீது பற்றாக்குறை எனக்கூறி எனக்கு கொடுத்த அதே  ரசீதில் கருப்புசாமிக்கும் அபராதம் விதித்தார். அந்த ரசீதில் எந்த ஒரு அதிகாரியின் கையெழுத்தும் இல்லை. பணம் கட்டியதற்கான ரசீது கேட்டதற்கும் அதெல்லாம் கிடையாது என கூறினார். நாங்களும் பணம் கட்டிவிட்டு அங்கிருந்து  சென்றுவிட்டோம்’ என கூறினார். இதுகுறித்து போலீஸ் உதவி கமிஷ்னர் வெற்றிவேந்தனிடம் கேட்டபோது, ‘இது சம்பந்தமாக புகார்கள் ஏதும் வரவில்லை. சிலர் ஒரே ரசீதை வாங்கிச்சென்று அதில் அவர்களே பெயரை எழுதிவிடுகிறார்கள். எனவே இது குறித்து விசாரணை  செய்கிறோம்’ என்றார்.

Related Stories: