×

போலி உதித்சூர்யாவும் மருத்துவ மாணவரா?: திடுக் தகவல்கள்

தேனி,: சென்னையை சேர்ந்த ஒரிஜனல் உதித்சூர்யா, நீட் தேர்வு நடந்த அன்று சென்னையில் அவரது வீட்டில் தங்கியிருந்தார் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் வெளிமாநிலங்களிலும் விசாரணை  நடத்த வேண்டியுள்ளதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மாவட்ட காவல்துறை நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.இதுகுறித்து தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: நீட் தேர்வு எழுதி, அதில் 385 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற வேண்டுமானால் மருத்துவத்துறை சார்ந்த ஒரு மாணவர் தான் இவருக்கு பதிலாக தேர்வு எழுதியிருக்க வேண்டும். இதனால் போலி உதித்சூர்யாவின் போட்டோ  இமேஜையும், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களின் இமேஜையும் ஒப்பிட்டு பார்க்கும் பணிகள் நடந்தது. இதில் போலி உதித்சூர்யா தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

எதற்காக இவர் நீட் தேர்வு எழுதினார், பேரம் எதுவும் பேசப்பட்டதா, திடீரென இந்த விவகாரத்தை வெளிப்படுத்திய அசோக்கிருஷ்ணன் யார், எதற்காக இவ்விஷயத்தை அவர்  மெயிலில் புகார் அனுப்ப வேண்டும் என குழப்பம் ஏற்பட்டுள்ளது.  இதன் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. இதுதொடர்பாக வெளிமாநிலங்களிலும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே தான் தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் இந்த  வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற ஆர்வம் காட்டுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.இரண்டாம் நாளாக போலீஸ் விசாரணை: இரண்டாம் நாளாக நேற்றும், மாலை 4 மணிக்கு இன்ஸ்பெக்டர் உஷா, எஸ்ஐ அசோக் தலைமையிலான குழுவினர் தேனி மருத்துவக் கல்லூரிக்கு வந்து பேராசிரியர்கள், முதல்வரால் நியமிக்கப்பட்ட  விசாரணைக்குழுவிடம் விசாரணை நடத்தினர்.

மாணவன், தந்தையை கைது செய்ய தீவிரம் தேனி எஸ்பி பாஸ்கரன் நேற்று அளித்த பேட்டி:
தேனி மருத்துவக் கல்லூரியில் போலி உதித்சூர்யா வந்து தான் சேர்ந்துள்ளார். ஒரிஜனல் உதித்சூர்யா அவருடன் வந்தார் என்று கூறப்படுகிறது.  ஆள்மாறாட்டம் செய்துள்ள விஷயம் குறித்து மெயிலில் புகார் வந்ததும், முதல்வர் ராஜேந்திரன்  தொடர்புடைய மாணவர், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளார். அவர்களை போலீசில் ஒப்படைக்காதது ஏன் என கேட்டதற்கு இந்த குளறுபடி நீட் தேர்வு மையத்தில் நடந்தது என நினைத்து  உயர்  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தாகவும், இந்த விஷயம் இவ்வளவு சீரியஸாகும் என தெரிந்திருந்தால், அப்போதே போலீசில் ஒப்படைத்திருப்பேன் எனவும் முதல்வர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் யார் குற்றவாளி என்பது ஒரிஜனல்  உதித்சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் கைதானால் மட்டுமே தெரியவரும். தலைமறைவாக உள்ள அவர்களது குடும்பம் ஓரிடத்தில் இல்லை. அடிக்கடி முகாமை மாற்றிக்கொண்டே உள்ளனர். விரைவில் அவர்கள் கைதாகும்  வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து திங்கள்கிழமை (இன்று) முடிவு எடுக்கப்படும் என்றார்.

Tags : Fake, Uditsuriya, Medical Student
× RELATED மானாமதுரையில் சோமநாதர் கோயில் தேரோட்டம்