போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் ரேஷன் அரிசி கடத்தல் தகராறில் ரயிலுக்கு குண்டு மிரட்டல்

சேலம்: சேலம் உள்பட 5 ரயில்வே ஸ்டேஷன்கள், 6 ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு 2 நாட்களுக்கு முன், மணிவேல் என்பவரது பெயரில் ஒரு கடிதம் வந்தது. அதில், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களிலும், சென்னை-கோவை  இன்டர்சிட்டி, வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரயில்களிலும் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி சேலம் ரயில்வே போலீசில் அதிகாரிகள் புகார் செய்தனர்.  டிஎஸ்பி பாபு தலைமையிலான  போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அக்கடிதத்தில் ஒரு ஆம்னி வேன் எண்ணை குறிப்பிட்டு அதில்தான், வெடிகுண்டுகளை நிரப்பி வந்து வெடிக்கச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணை கொண்டு விசாரித்ததில், அது  நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த பிரபல ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தலைவன் மணிவேலின் (50), ஆம்னி வேன் என தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து வந்து விசாரித்தனர். அதில், அவரை பழிவாங்குவதற்காக மர்மநபர், அக்கடிதத்தை அனுப்பியிருப்பது தெரிந்தது. அதுபற்றி போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு  முன், நாமக்கல் அருகே ஒரு கிராமத்தில் மக்களிடம் இருந்து ஒரு கிலோ ரேஷன் அரிசி 7க்கு வாங்கியபோது, மணிவேல் தரப்பிற்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் மணிவேலை பழிவாங்க ரயில்வே  ஸ்டேஷன்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசில் சிக்கவிட்டது தெரிந்துள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் ேகாஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இச்சம்பவம் நடந்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அதனால், மணிவேலை போலவே கிராமங்களில் ரேஷன் அரிசியை மக்களிடம் இருந்து வாங்கும் நபர்களை  பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். அதிலும், மணிவேலிடம் தகராறு செய்த குறிப்பிட்ட நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: