பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டத்தை வாழ்க்கையாக கொண்டவர் கலைஞர்: ஈரோடு சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஈரோடு,: மறைந்த திமுக தலைவர் கலைஞரின் வாழ்க்கையானது பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டம் நிறைந்தது, என ஈரோட்டில் நேற்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தந்தை பெரியார், அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு அருகில் தி.மு.க. தலைவர் கலைஞரின் 8 அடி உயரம் 800 கிலோ எடை கொண்ட வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நேற்று  நடைபெற்றது. விழாவில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞரின் சிலையை திறந்து வைத்து பேசியதாவது: பல போராட்டங்களுக்கு இடையே, எதிர்ப்புகளுக்கு இடையே வாதாடி வெற்றிகண்டு அந்த வெற்றியின் பலனாக இன்று கலைஞர் சிலை திறக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பிறகு முதன்முதலில் அண்ணா அறிவாலயத்தில் அவரது  திருவுருவச்சிலை திறக்கப்பட்டது. அந்த விழாவில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு, ஈரோட்டில் முனிசிபல் காலனியில் 2வது சிலை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம்,  திருச்சியிலும், சென்னை முரசொலி அலுவலகத்தில் மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். தற்போது ஈரோட்டில் 2வது முறையாக பன்னீர்செல்வம் பார்க்கில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.

 ஏ.பி.பன்னீர்செல்வம் திராவிட இயக்கத்திற்காக பல தியாகங்களை செய்தவர். திராவிட கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அந்த அடிப்படையில் திராவிட இயக்க சுடராக விளங்கிய கலைஞரின் சிலையை பன்னீர்செல்வம் பார்க்கில்  திறந்திருப்பது பொருத்தமானது. பல போராட்டங்களுக்கு இடையே தான் கலைஞரின் வாழ்க்கையே இருந்துள்ளது. மாணவர் பருவத்தில் திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் சேரச்சென்றபோது பள்ளி நிர்வாகம் அவரை சேர்க்க முடியாது என்று  கூறிவிட்டது. சுய மரியாதை, சீர்திருத்தவாத கொள்கைகளை கொண்டுள்ளதால் மற்ற மாணவர்களையும் கெடுத்துவிடுவாய் என்று கூறி பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. பள்ளியில் என்னை சேர்க்காவிட்டால் எதிரில் உள்ள கமலாலயம்  குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி போராட்டம் நடத்தினார். அதன்பிறகுதான் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  பின்னர் தயாளு அம்மாளுடன் நடந்த திருமணத்தின்போது திருமண மாலையோடு இந்தி எதிர்ப்பு  போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பிறகு கல்லக்குடி போராட்டம், மொழிப்போராட்டத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். இந்திராகாந்தி காலத்தில் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது தனக்கு ஆட்சி முக்கியமில்லை, மொழிதான் முக்கியம் என்று கூறி மொழியை காப்பாற்ற உயிரைக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி கடற்கரையில்  நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது ஆட்சி பறிபோனது. இப்படி பல போராட்டங்கள் நடந்த போதிலும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மறைந்த காலத்திலும் 6 அடி இடத்திற்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

 அண்ணா ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகே கலைஞர் ஓய்வெடுக்க விரும்பினார். ஏழை, எளிய, சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, ஒட்டுமொத்த தமிழினத்திற்காக பாடுபட்டு 5 முறை முதலமைச்சராக இருந்து, தமிழுக்கு  செம்மொழி பட்டம் பெற்றுத்தந்தவர்க்கு 6 அடி நிலம்கூட தர அதிமுக அரசு மறுத்துவிட்டது. பின்னர் நீதிமன்றம் சென்று வாதாடி வென்று அண்ணாவுக்கு அருகில் தற்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். கலைஞரின் வாழ்க்கை என்பது  பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டமாகத்தான் இருந்துள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவுக்கு,ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர்  முத்துசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி  ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், எ.வ.வேலு, வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், என்.கே.கே.பி.ராஜா  ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.உற்சாக வரவேற்பு: முன்னதாக, சிலை திறப்பு விழாவுக்காக வந்த ஸ்டாலினுக்கு ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர் கார் மூலமாக பன்னீர்செல்வம் பார்க்குக்கு வந்தார். அப்போது வழி நெடுகிலும் தி.மு.க. தொண்டர்கள் கட்சி கொடிகளை கைகளில் ஏந்தியபடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.பல போராட்டங்களுக்கு இடையே வாதாடி வெற்றிகண்டு அந்த வெற்றியின் பலனாக இன்று கலைஞர் சிலை திறக்கப்பட்டுள்ளது

Tags : Artist ,MK Stalin , struggle, birth, death, MK Stalin
× RELATED தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக...