வங்கக் கடலில் காற்றழுத்தம் நீடிப்பதால் 17 மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை,: வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில்  மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகி அது புயலாக மாறியது. அதுதற்போது குஜராத் அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடல்  பகுதியில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது. அதனால், குமரிக் கடல், வங்கக் கடல் பகுதியில் உள்ள ஈரப்பதம் உள்ள காற்று வட மேற்கு திசையில் பயணிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. அத்துடன் வெப்ப சலனம்  காரணமாகவும் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாகவும் மழை பெய்கிறது. அதிகபட்சமாக திண்டிவனத்தில் நேற்று 70மிமீ மழை பதிவாகியுள்ளது. பள்ளிப்பட்டு 60மிமீ, ஆண்டிப்பட்டி, போச்சம்பள்ளி, பென்னாகரம்  50மிமீ, உளுந்தூர்பேட்டை 40மிமீ, அரவக்குறிச்சி, போடிநாயக்கனூர், வெச்சந்தூர், மேட்டூர், கோத்தகிரி, பூந்தமல்லி 30மிமீ, பெரும்புதூர், செம்பரம்பாக்கம், திண்டுக்கல் 20மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை, சென்னை புறநகரில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மாலை வரை இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இரு சக்கர வாகனங்களில்  செல்வோர், சாலையில் குளம்போல நிற்கும் மழை நீர் உள்ள பகுதிகளில் பயத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில்  இருந்து மாலை வரை சென்னை, புறநகர் பகுதிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி  இருப்பதால், பொதுமக்கள்  பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதே இடத்தில் நீடித்து வருகிறது. அதன் காரணமாக கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் நீடிப்பதை அடுத்து உள்  மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், காற்றழுத்தம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, திண்டுக்கல், தர்மபுரி,  கிருஷ்ணகிரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்நிலையில், தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியதில்  இருந்து நேற்று வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயல்பு நிலையை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக 10 மாவட்டங்களில் அதிக அளவில்  பெய்துள்ளது. திருச்சி 7 சதவீதம், ராமநாதபுரம் 5சதவீதம், கரூர் 4 சதவீதம், கன்னியாகுமரி 7 சதவீதம், இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது.

Related Stories: