போக்குவரத்து ஆணையரிடம் புதிய வாகன மாடல்களுக்கு ஒப்புதல் வாங்கும் உத்தரவை எதிர்த்து வழக்கு: மத்திய அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சகர்ஸ்தமானி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தொழிற்சாலைகள் புதிய மாடல் வாகனங்களை (இருசக்கரம், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள்) உற்பத்தி செய்யும்போது அந்த வாகனம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ‘வாகன் நிக்’ என்ற மத்திய அரசின் இணைய தளத்தில்  பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்களின் அடிப்படையில் தேசிய சோதனை முகமை அந்த வாகனத்தை ஆய்வு செய்து ஒப்புதல் தந்து வாகன் நிக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும். இந்த தகவல்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாகனங்களை வாங்குபவர்களுக்கு உடனுக்குடன் வாகனப் பதிவு செய்யப்படுகிறது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இதற்கு நேர் எதிரான நிலை உள்ளது. புதிய மாடல் வாகனங்களை உற்பத்தி செய்யும்போது  அந்த மாடல் வாகனங்களுக்கு போக்குவரத்து ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கட்டணமாக ₹10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்து கடந்த மே 9ம் தேதி  அரசாணையை வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த அரசாணையால் புதிய மாடல் வாகனங்களுக்கு ஒப்புதல் பெற 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மத்திய வாகன சட்டத்தின்கீழ் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் தமிழகத்தில் மட்டும் கூடுதலாக தேவையற்ற ஒரு நடைமுறையை அரசு கொண்டு வந்திருப்பது விதிகளுக்கு முரணானது. இதனால், வாகன விற்பனை தொழில் கடுமையான சரிவை சந்திக்க நேரிடுகிறது. வாகனங்களை விற்பனை செய்த பிறகும் பதிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விதிகளுக்கு முரணாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.கோவிந்தராமன் ஆஜராகி வாதிடும்போது, தமிழக அரசின் இந்த புதிய அரசாணையால் வாகன உற்பத்தியில் சிக்கல் ஏற்படும். மேலும், லஞ்ச லாவண்யத்தையும் அதிகரித்துவிடும் என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வரும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை பதில் தர வேண்டும் என்றும், வழக்கில் இறுதி வாதம் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Stories: