சென்னை நங்கநல்லூர் தொழிலதிபரிடம் 120 சவரன் கொள்ளையடித்த பஹ்ரியா கும்பல் மும்பையில் சிக்கியது: தமிழகம் அழைத்து வர தனிப்படை போலீசார் விரைந்தனர்

சென்னை: நங்கநல்லூரில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை அடித்த பஹ்ரியா கும்பலை சேர்ந்த 9 பேரை மும்பை போலீசார் சுற்றி வளைத்து மும்பையில் கைது செய்தனர். சென்னை நங்கநல்லூர், ஸ்டேட் பாங்க் காலனி விரிவு 2வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ரமேஷ் (52). இவர் கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு சென்றார். இதனால் அவரது  மனைவி மற்றும் குழந்தைகள் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில், 20ம் தேதி மாலை அவர்கள் வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 120 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து  சென்றது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 7 தனிபடைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்து வந்தனர். அந்த வீட்டின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த வீட்டில் கொள்ளையடித்தது,  கதவுகள் உடைக்கப்பட்ட விதம் போன்றவை வடமாநில கொள்ளை கும்பலின் கைவரிசை எனத் தெரியவந்தது.இதையடுத்து இக்கும்பல் ரயில் மூலம் வடமாநிலங்களுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், கடந்த 21ம்  தேதி இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் ரயில் மூலம் இக்கொள்ளை கும்பல் தப்பி செல்வது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த பதிவுகள் குறித்து மும்பை ரயில்வே போலீசாருக்கு தமிழக போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயிலில் வந்திறங்கிய 9  பேர் கொண்ட கும்பலை நேற்று முன்தினம் மும்பை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.  அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் சங்கரநாராயணன் தலைமையிலான தமிழக போலீசாரிடம் கைதான 9 பேர் ஒப்படைத்தனர். அக்கும்பலை மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் இந்தூருக்கு தமிழக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும், சென்னையில் இருந்து 3 தனிப்படை போலீசார் இந்தூருக்கு வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழக போலீசார் கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் 9 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய பஹ்ரியா கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத்  தெரியவந்துள்ளது.பிடிபட்டவர்கள், வடநாட்டை சேர்ந்த கமல் பாட்டி (20), ராய்மால் (22), ராம்நிவாஸ் (21), கைலாஷ்பதி (30), அவுரவ் (25), ஹாடு (22), சவாரியா (20), பாபுலு (25), ராம்தா உயா (22) என தெரியவந்தது.

வடமாநிலத்தில் புது கொள்ளை கும்பல்  

தமிழ்நாட்டில் 1999 முதல் 2005 வரை ஒரு கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள்  24 கொள்ளையில் ஈடுபட்டு பல கோடி கொள்ளையடித்தனர். இதில் 13 பேர் 10 ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டனர்.இந்நிலையில்  கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனத்தை ஒரு  கொள்ள கும்பல் கொலை செய்து விட்டு பணம் நகைகளுடன் தப்பியது. இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரும்  சவாலாக இருந்தது. இதனையடுத்து அப்போதைய டிஜிபி அலெக்சாண்டர் இந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

அப்போதைய வடக்கு மண்டல ஐஜி ஜாங்கிட் தலைமையிலான போலீசார் கொலை, கொள்ளை சம்பவங்களில் கிடைத்த  தடயங்களை வைத்து இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டனர் என்பதை கண்டு பிடித்தனர். பிறகு ராஜஸ்தான் மாநிலத்திற்கே  தமிழக போலீசார்  சென்று கொள்ளையர்களை கைது செய்தனர்.இந்த சம்பவத்திற்கு பிறகு பவாரியா கும்பல் நடமாட்டம் அறவே இல்லாமல் போனது. இந்த நிலையில் பவாரியா கும்பலில் இருந்து பிரிந்த மற்றொரு கும்பலான பஹ்ரியா கும்பல் கடந்த 2 ஆண்டுகளாக இது போன்ற கொள்ளைச் சம்பங்களில்  ஈடுபட்டு வந்தது. தற்போது நங்கநல்லூர் கொள்ளச் சம்பவத்தில் பஹ்ரியா கும்பல் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>