பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு மூலம் எம்சாண்ட், கட்டுமான பொருளுக்கு சான்று வழங்க 5 லட்சம் லஞ்சம்: ஆராய்ச்சி செய்யாமல் லட்சக்கணக்கில் ஸ்வாகா

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு மூலம் ஆராய்ச்சி செய்யாமல் லட்சக்கணக்கில் பணம் ஸ்வாகா செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவின் ஒரு அங்கமான தமிழ்நாடு அரசு கட்டிட  ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதன் மூலம் பொதுப்பணித்துறையில் அரசு கட்டிடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளில் மாற்றம் கொண்டு வருவது, புது வடிவமைப்பு, பசுமை கட்டிடங்கள் ேபான்ற எதிர்கால கட்டுமானங்கள்  குறித்து ஆராய்ச்சி செய்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும், கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான தர மதிப்பீடும் வழங்கப்படுகிறது. இந்த மையத்துக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த மையம் சார்பில் கடந்தாண்டில் ஆராய்ச்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த 4  ஆண்டுகளில் 2 ஆராய்ச்சி மட்டுமே நடந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி மையம் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை பொறியியில் மாணவர்கள், பொறியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவது போன்று செலவு செய்ததாக கணக்கு காட்டப்படுகிறது.  ஆனால், இந்த மையம் மூலம் கட்டுமானத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்த மையம் மூலம் தான் கட்டுமான பொருட்களுக்கு சான்று வழங்கப்படுகிறது. இந்த சான்று பெறும் நிறுவனங்களின் கட்டுமான பொருட்களே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த  முடியும். இதை பயன்படுத்தி கொண்டு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் கட்டுமான பொருட்களுக்கு அனுமதி வழங்குகின்றனர். இதனாலேயே கட்டுமான பணிகளின் தரம் தற்போது வரை கேள்விக்குறியாக தான் உள்ளது.  குறிப்பாக சமீபத்தில் பூந்தமல்லியில் அரசு மேல்நிலைபள்ளியில் கூடுதல் வகுப்பறை தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடந்தது உட்பட பல்வேறு கட்டுமான பணிகளில் புகார் இருப்பதாக கூறப்படுகிறது. கட்டுமான பணிகளில் தரத்தை  மேம்படுத்த இந்த மையம் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சான்று பெறுவது எப்படி?  எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறையின் இம்மையம் சார்பில் தான் சான்று வழங்கப்படுகிறது. இந்த சான்று பெற குவாரி உரிமையாளர்களிடம் தலா ரூ.5 லட்சம்  வரை லஞ்சமாக  பெறப்பட்டு, மதிப்பீட்டு சான்று வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு பணம் கொடுத்து சான்று தருவதால், அந்த குவாரிகளிடம் இருந்து பெறப்படும் மணல் தரமாக இருக்கிறதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில்  எழுந்துள்ளது.

Related Stories: