×

சாலையோர காலணி தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்: மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தகவல்

சென்னை: சாலையோரம் காலணி தைக்கும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக புதிய திட்டம் ஒன்றை விரைவில் மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்  மகேந்திரநாத் பாண்டே கூறியுள்ளார். தோல்துறை திறன் கழகம் சார்பில் முறைசாரா பணியாளர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சி பெற கொண்டுவரப்பட்ட ‘முன் கற்றலுக்கு அங்கீகாரம்’ என்ற திட்டத்தில் பயின்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று  நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் திட்டத்தில் பயிற்சி  நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே வழங்கினார்.  பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சாலையோரங்களில் காலணி தைக்கும் தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டுவர உள்ளது.

குறிப்பாக, இந்த திட்டம் இன்னும் உத்வேகமாக பணியை செய்ய அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சாலையோரங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் காலணி தைக்கும் தொழிலாளர்களுக்கு சுயமரியாதையோடு பணியை  செய்ய உகந்ததாக இந்த திட்டம் அமையும்.   இதேபோல், புழல் மத்திய சிறையிலும் பல்வேறு தொழில்களை கைதிகள் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தோல் தொழில் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு நாள்தோறும் 140 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். தோல் தொழில் துறை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கூறினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கீழடியில் நடைபெற்றுள்ள முதல் மூன்று அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன். இதைப்பெற்று முதல் மூன்று அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும். தொல்லியல் துறைக்கென்று தனி தொலைநோக்கு பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது. இதில், தொல்லியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் புதியதாய் தோண்டப்பட உள்ள இடங்கள் குறித்து முழுமையான  தகவல்கள் இடம்பெறும் என்றார்.


Tags : Mahendranath Pandey ,roadside shoe workers ,Mahendranath Pandey Union , New scheme , shoe workers, Union Minister ,Mahendranath Pandey
× RELATED மத்திய அமைச்சர்களாக மகேந்திரநாத்...