எடப்பாடி அரசுக்கு பாடம் புகட்டுவோம்: வாக்காளர்களுக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று வாக்காளர்களுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முறையே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக முழு அளவில் களத்தில் பணியாற்றும். தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருகிற மத்திய பாஜ அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இடைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்.மாநில உரிமைகள் அனைத்தையும் டெல்லியின் காலடியில் அடகுவைத்துவிட்டு அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆட்சிப் பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற கொந்தளிப்பு தமிழக மக்கள் உள்ளத்தில் எப்போதோ  எழுந்துவிட்டது. அதற்கு முன்னோட்டமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளித்தார்கள்.

தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களிலும் மக்கள் விரோத அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் காத்திருக்கின்றார்கள். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதுவை மாநிலத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக புதுவை மாநில நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.

Related Stories: