விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனுத்தாக்கல்: இன்று நேர்காணல்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைதேர்தலில் 2 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் 22, 23ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்று அதிமுக  தலைமை அறிவித்தது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் விருப்ப மனு வாங்கப்பட்டன. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திரைப்பட இயக்குனரும், நட்சத்திர பேச்சாளரும் நாஞ்சில் பி.சி.அன்பழகன் விருப்ப மனு தாக்கல் செய்தார். அப்போது கலைப்பிரிவு தலைவர் லியாகத் அலிகான், நட்சத்திர பேச்சாளர்கள்  ரவி மரியா, அனுமோகன், ரங்கநாதன், கவிஞர் முத்துலிங்கம், ஜெயபிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.தொடர்ந்து நடிகர் ரவிமரியா அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தல் ஆகட்டும், சட்டசபை தேர்தல் ஆகட்டும், இடைத்தேர்தல் ஆகட்டும் அதிமுக சார்பில் நிற்கும் வேட்பாளர்களுக்காக பல வருடங்களாக நட்சத்திர பேச்சாளர், ேபச்சாளர்கள் ஓட்டு  கேட்டு வருகின்றனர். அதுவும் தெரு, தெருவாக திண்ணை பிரசாரம் மூலமாகவும், வீடு, வீடாகவும் நட்சத்திர பேச்சாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். அப்படிபட்ட எங்களுக்கு இந்த இடைதேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக  வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று அஷ்டமி என்பதால் குறைவான அளவிலேயே விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். இதே ேபால நேற்று முன்தினமே பலர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். நாங்குநேரி தொகுதியில் போட்டியிட அதிமுக அமைப்பு  செயலாளரும், முன்னாள் எம்பியுமான மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்பி கே.ஆர்.பிரபாகரன் உள்பட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். இதே போல விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பி  ஆர்.லட்சுமணன் உள்பட ஏராளமானோர் விருப்பமனுக்களை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. விருப்ப மனுக்களை கொடுப்பதற்கு இன்று கடைசி நாள் ஆகும். இதனை தொடர்ந்து இன்று மாலை 3.30 மணியளவில் விருப்பமனு  அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. அதன் பிறகு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதிக்கு 18 பேரும், விக்கிரவாண்டி தொகுதிக்கு 9 பேரும் என மொத்தம் 27 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: