பிஸ்கெட் விற்பனை மந்தமானதற்கு பொருளாதார வீழ்ச்சியே காரணம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: பிஸ்கெட் விற்பனை மந்தமானதற்கு பொருளாதார வீழ்ச்சியே காரணம் என கே.எஸ்.அழகிரி கூறினார்.சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்குநேரியில் இடைத்தேர்தலில் எங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை கலந்து பேசி, தகுதியான வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம். கிராம மக்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருந்தால்தான், அவர்கள் பொருட்களை  அதிகமாக வாங்குவதுடன் வியாபாரமும் வளர்ச்சியடையும். அதனால் உற்பத்தியும் பெருகும். ஆனால், தற்போது பணப்புழக்கம் இல்லாமல் ஒரு பிஸ்கெட்கூட வாங்க முடியவில்லை. இதனால் பிஸ்கெட் வியாபாரம் இல்லாமல், அதுசம்பந்தமான  கம்பெனிகள் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சியை பிஸ்கெட் விற்பனை மந்தமானதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். இதையெல்லாம் மறைப்பதற்காகத்தான் சிதம்பரம் கைது, காஷ்மீர் பிரச்னை, மொழி பிரச்னை என மத்திய அரசு மக்களின் கவனத்தை  திசைதிருப்பி கொண்டிருக்கின்றன. நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெறும். பாஜ அரசின் பொருளாதார சீர்கேடு, வேலைவாய்ப்பு இழப்பு, மாநில அரசின் செயல்படாத தன்மை, ஊழல் முறைகேடுகளை மக்களிடம்  எடுத்து கூறி பிரசாரம் செய்து, நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்.இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் வாங்கியதற்கு காரணம், மத்திய அமைச்சர் அமித்ஷாதான். அவர் தான் முதலில் கூறியதை மறுத்து, தானே பின்வாங்கிவிட்டார். நான் இந்தியை திணிக்க வேண்டும் என கூறவில்லை. ஒரு பொது மொழி  வேண்டும் என்றுதான் கூறினேன். எனவே, அமித்ஷாவை போல் மு.க.ஸ்டாலின் பின்வாங்கவில்லை. அமித்ஷா பின்வாங்கிய பின்பும் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. அமித்ஷா சொன்னதுக்காகத்தான் போராட்டம். அவர்  நான் அப்படி சொல்லவில்லை என்று கூறியபிறகு, அப்பிரச்னை முடிந்துவிட்டது. எனவே, நாங்களோ திமுகவோ அமித்ஷாவுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை.

Related Stories: