மதுரை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும்: முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவு

சென்னை: மதுரை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும் என்று முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். பாசனத்தில் விவசாயிகளை பங்கேற்க செய்யும் வகையில் கடந்த 2001ல் தமிழ்நாடு  விவசாயிகள் பாசனம் மற்றும் நீர் பங்கீட்டு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி விவசாயிகளை கொண்டு நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள்  உருவாக்கப்பட்டன. இதன் மூலம் நீரினை பகிர்வது, கால்வாய்களை பாதுகாப்பது, உடைப்பை சரி செயதல், விவசாயம் சார்ந்த திட்டங்களை தீட்டுவது, நீர் திறப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளில் இச்சங்கத்தினர் ஈடுபடுவார்கள். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு  நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், விவசாயம் மற்றும் நீர்பங்கீடு சம்பந்தமான பணிகள் கடுமையாக பாதித்துள்ளன. மேலும், தற்போது நடந்து வரும் குடிமராமத்து பணிகளில் இந்த சங்கத்தினரின் பங்கு இல்லாமல் போனது. மாறாக, அரசியல் வாதிகளை கொண்டு இந்த  குடிமராமத்து பணியில் நடத்தப்படுவதால் முறைகேடு புகார்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நீரினை பயன்படுத்ததுவோருக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று ராமநாதபுரம் விவசாயிகள் அமைப்பினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீரினை பயன்படுத்துவோருக்கான  தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, அனைத்து ஏரிகளுக்கும் முதல் நிலை  நீரினை பயன்படுத்துவோர் சங்கம் என்று ஒன்றை அமைக்க வேணடும்.  இரண்டாம் நிலையில் நீர் விநியோக குழு ஒன்றையும், திட்டக் குழு உருவாக்க வேண்டும். இந்த குழுவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவி பொறியாளர் ஒருவரை நியமனம் செய்து சங்க தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.  இதற்காக, ஒவ்வொரு மண்டல தலைமை பொறியாளர் அலுவலக அதிகாரிகள்,  நில  உரிமையாளர்கள் ஆகியோர் ெகாண்ட வாக்காளர் பட்டியலை தயார் செய்ய உதவி பொறியாளர்களை அறிவுறுத்த வேண்டும். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த பட்டியல் தயார் செய்த 6 மாதங்களுக்குள் இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்த பணிகளில் கூடுதல் உதவி பொறியாளர்கள் தேவை எனில் தேர்தல்  பணிக்காக நியமித்து கொள்ளலாம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சங்கத்துக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். இந்த சங்கத்தில் தலைவர் உட்பட 7 பேர் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: