விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவோர் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார், கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குநேரி  தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் இந்த  தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி வேட்புமனு தாக்கல்  செய்ய கடைசி நாள் ஆகும். தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். அக்டோபர் 3ம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று மாலையிலேயே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. அதே போல அதிமுகவும் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. அவர்களும் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க  உள்ளனர். இதனால், இந்த தேர்தலில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. நாளை, நாளை மறுநாளுக்குள் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அவர்கள் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். அதே நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால், இன்னும் ஓரிரு  நாளில் பிரசாரம் அனல் பறக்க தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: