குன்றத்தூர் பகுதி குடோனில் பதுக்கிய 6 டன் போதை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

பல்லாவரம்: குன்றத்தூர் பகுதியில் குடோனில் பதுக்கிய 6 டன் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்தனர். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலை அருகே குன்றத்தூர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி போலீசார் விசாரணை செய்தனர்.அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த அலிபாபா (52) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஊரப்பாக்கத்தில் உள்ள குடோனில்  மொத்தமாக பதுக்கி வைத்து, குன்றத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

Advertising
Advertising

இதையடுத்து அந்த குடோனில் போலீசார் சோதனை செய்தபோது, சுமார் 6 டன் எடை கொண்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், குட்கா கடத்தி வந்து கடைகளுக்கு விற்பதற்கு உதவிய அலிபாபாவின் நண்பர்  சரவணன் (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை ஸ்ரீபெரும்புதூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த குட்கா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முருகன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மொத்த மதிப்பு ₹20 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

15 கிலோ கஞ்சா சிக்கியது

வண்ணாரப்பேட்டை காட்பாடா பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால், அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், திருவொற்றியூரை சேர்ந்த சின்னத்துரை (51), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நரேஷ் (22) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, திருவொற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன், மூலக்கொத்தலம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய எர்ணாவூரை சேர்ந்த சத்யா (35),  வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரண்ராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: