ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28.5 லட்சம் தங்கம் ஐபோன்கள் பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்

சென்னை: ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹28.5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள், இ-சிகரெட், ஐபோன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஹாங்காங்கில் இருந்து தாய்லாந்து வழியாக தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சையத் இப்ராகிம் (43), முகமது ரிபாய் (41) ஆகிய 2 பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் ஹாங்காங்கிற்கு சென்று, சென்னைக்கு திரும்பி வந்தனர். இவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களை நிறுத்தி  விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.  இதையடுத்து இவர்களது உடமைகளை திறந்து பார்த்து சோதித்தனர். அப்போது,  சூட்கேசில்  தடை செய்யப்பட்ட இ-சிகரெட் 89 பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மதிப்பு ரூ.1.1 லட்சம்.

Advertising
Advertising

அதேபோல்  ஏராளமான ஐபோன்கள் மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.21.2 லட்சம். சூட்கேசின் லைனிங் துணிக்குள் 164 கிராம் தங்க கட்டிகளும் இருந்தன. இதன் மதிப்பு ரூ.6.2 லட்சம். தங்கம் உள்ளிட்ட அனைத்து கடத்தல் பொருட்களையும் அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இதன் மொத்தமதிப்பு ரூ.28.5 லட்சம் ஆகும். இவைகளை கடத்தி வந்த 2 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இவைகளை யாருக்காக கடத்தி வந்தனர் என்பது குறித்து சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: