150 சவரன் நகை மாயமான வழக்கில் திருப்பம் கணவனுக்கு தெரியாமல் நகைகளை எடுத்து மனைவி சொகுசு வீடு வாங்கியது அம்பலம்: பரபரப்பு தகவல்

சென்னை: சைதாப்பேட்டையில் 150 சரவன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக, கணவனுக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்து மனைவி சொகுசு வீடு வாங்கியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சைதாப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (53), வழக்கறிஞர். இவரது மனைவி ஜோதி. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். சத்தியமூர்த்தி, தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 150 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சத்தை கடந்த 2 நாட்களுக்கு முன் சரி பார்த்தபோது, நகை மற்றும் பணம் மாயமானது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி மனைவியிடம் கேட்டுள்ளார்.அப்போது அவர், ‘‘கடந்த 17ம் தேதி ஒருவர் வீட்டிற்கு வந்தார். அவர் மாய வித்தைகளை காட்டி வீட்டில் உள்ள நகைகளை கேட்டார். இதனால் அந்த நபரிடம் வீட்டில் இருந்து நகைகளை எடுத்து கொடுத்தேன். சிறிது நேரத்தில் அவர் நகைகளை என்னிடம் திரும்ப கொடுத்து விட்டுவிட்டு சென்றார். அதன்பிறகு நகை, பணத்தை மீண்டும் பீரோவில் வைத்தேன். ஆனால், அது எப்படி மாயமானது என தெரியவில்லை,’’ என தெரிவித்துள்ளர்.

Advertising
Advertising

இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். போலீசார், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தபோது, வழக்கறிஞர் வீட்டிற்கு யாரும் சந்தேகப்படும்படி வந்து சென்ற காட்சிகள் பதிவாகவில்லை.இதையடுத்து வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தபோது சமையல் அறையில் நகைகளுக்கான காலி பெட்டிகள் கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோதும் நகைகள் மாயமானது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், போலீசாருக்கு வழக்கறிஞர் மனைவி ஜோதி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஜோதியை பிடித்து விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். தீவிர விசாரணையில், ‘‘கணவன் சத்தியமூர்த்திக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்து, அந்த பணத்தை மகன் சரண்ராஜிடம் கொடுத்து கணவனுக்கு தெரியாமல் சொகுசு வீடு வாங்கினேன்,’’ என தெரிவித்துள்ளார்.மேலும், இதுபற்றி கணவனுக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்பதால் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து மாய வித்தை காட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியதும் அம்பலமானது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: