கச்சா எண்ணெய் விலை குறைந்தும் சவூதி தாக்குதலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் கிடுகிடு: சென்னையில் ரூ.1.74 அதிகரிப்பு

புதுடெல்லி: சவூதி தாக்குதலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு திடீரென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்தும், பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது.  சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த 14ம் தேதி சவூதியில் எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 19.5 சதவீதம் உயர்ந்து 72 டாலரை நெருங்கியது.  ஆனால், இந்த தாக்குதல் காரணமாக இழப்பு ஏற்பட்டாலும், சப்ளையில் பாதிப்பு இருக்காது. உற்பத்தி சில வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என சவூதி எண்ணெய் நிறுவனம் உறுதி அளித்தது. தாக்குதல் நடந்து ஒரு வாரத்தில் கச்சா எண்ணெய் விலை பேரல் சுமார் 64 டாலருக்குள் வந்து விட்டது. இருப்பினும் முந்தைய விலையோடு ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் கடந்த 6 நாட்களில் லிட்டருக்கு 1.59 அதிகரித்து  நேற்று ₹73.62ஆக இருந்தது. நேற்று மட்டும் 27 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை ₹1.31 அதிகரித்து நேற்று ₹66.74 ஆக இருந்தது. நேற்று மட்டும் 18 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

 இதுபோல் சென்னையில் கடந்த 14ம் தேதி லிட்டர் ₹74.78 ஆக இருந்தது. இதன்பிறகு 15ம் தேதியில் இருந்து நேற்று வரை பெட்ரோல் ₹1.74 உயர்த்தப்பட்டு ₹76.52 ஆக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 96 காசு உயர்ந்துள்ளது. இதுபோல் டீசல் விலை 15ம் தேதியில் இருந்து லிட்டருக்கு ₹1.47 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 79 காசு உயர்ந்துள்ளது. தினசரி விலை நிர்ணய நடைமுறை 2017ம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு இந்த முதல் முறையாக இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: