கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை குறைப்பு

பெங்களூரு: புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்தந்த மாநில அரசே அபராத தொகையை குறைத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.  அதன்படி  கர்நாடக மாநிலத்தில்  வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், அபராத தொகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான  அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதில் லைசென்ஸ் இல்லாமல் பயணித்தால் பழைய  கட்டணம் ₹5,000 என்று இருந்தது. அது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது  பைக் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹1000, இலகு ரக வாகனங்களுக்கு  ₹2 ஆயிரம், பிற வாகனங்களுக்கு ₹5 ஆயிரம் என்று நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அதிவேகமாக வாகனத்தை ஓட்டினால் ₹2 ஆயிரம்  என்று இருந்த அபராதம், பைக் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹1000,  இலகுரக வாகனங்களுக்கு ₹2 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால், ₹5 ஆயிரம் மற்றும் ₹10 ஆயிரம்  என்று இருந்த அபராத தொகை, பைக், ஆட்டோவிற்கு ₹1500, இலகுரக வாகனத்திற்கு  ₹3 ஆயிரம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் பல விதி மீறல்களுக்கு அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு  சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: