டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கக்கூடாது: பார் உரிமையாளர்களால் பரபரப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பேனர்களை சென்னை, திருவள்ளூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார் உரிமையாளர்கள் நிறுவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒட்டியவாறு 1,300க்கும் மேற்பட்ட பார்கள் இயங்கி வருகிறது. பெரும்பாலான கடைகளில் நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதில்லை. அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தலைமை அலுவலகத்திற்கு நாள்தோறும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க கடும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டாலும் அது பலனில்லாமல் போகிறது. இதேபோல், மதுபானங்களை பார்களில் வைத்து விற்பனை செய்யக்கூடாது. உணவு பொருள், திண்பண்டங்களை மட்டுமே பார்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த விதிகளை மீறி பல மாவட்டங்களில் பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் வசூல் வேட்டை மட்டுமே நடத்திவிட்டு வருவதால் இதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுகின்றது.

இதனால், கடை ஊழியர்களுக்கும், பார் உரிமையாளர்களுக்கும் இடையே அடிக்கடி முட்டல் மோதல் ஏற்பட்டவாறு உள்ளது. இந்தநிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார் உரிமையாளர்கள் தரப்பில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு வைத்து விற்பனை செய்யக்கூடாது என்ற எச்சரிக்கை விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்த கடையில் விற்கப்படும் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயம் செய்த அதிகபட்ச சில்லறை விலைக்கே கேட்டு வாங்கவும். எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் டாஸ்மாக் அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: