தண்ணீர் செல்வதில் சிக்கல்: அனந்தனாறு கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்.. நீர்நிலை பாதுகாப்பில் தொடரும் அலட்சியம்

நாகர்கோவில்: அனந்தனாறு கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி கிடப்பதால், நீர் நிலைகள் பெரும் மாசுக்குள்ளாகி உள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன கால்வாய் அனந்தனாறு கால்வாய் ஆகும். அனந்தனாறு கால்வாய் மூலம் காரவிளை, பெருவிளை, அனந்தன்நகர், ஆசாரிப்பள்ளம், பறக்கை, தெங்கம்புதூர் என பல்வேறு ஆயக்கட்டுகளுக்கு தனித்தனியாக தண்ணீர் பிரிந்து செல்கிறது.  பாசனம் மட்டுமின்றி வழியோர கிராமங்களின் குடிநீர் தேவைகளையும் கூட அனந்தனாறு கால்வாய் பூர்த்தி செய்கிறது. உரிய பராமரிப்பு இல்லாமல்,  நாகர்கோவில் மாநகரில் கழிவு நீர் கால்வாய்களாக இதன் கிளை கால்வாய்கள் மாறி உள்ளன.

வீட்டு கழிவுகள், பல்வேறு தொழிற்சாலை கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அனந்தனாறு  கால்வாயில் குவிந்து கிடக்கின்றன. உள்ளாட்சி நிர்வாகங்களே பல இடங்களில் இந்த கால்வாயில், கழிவு நீரை விடுகின்றன. இதனால் நன்னீர் மிகவும் அபாயகரமான கழிவு நீராக மாறி விட்டது. அதன் ஆபத்து தெரியாமல் இதில் பொதுமக்கள் குளித்து மகிழ்கின்றனர். நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம் வரும்போது, இந்த அவல நிலை மாறும் எனக்கூறினர். ஆனால், முதல்கட்ட பாதாள சாக்கடை பணிகளே இன்னும் முடிவடையாத நிலையில், இங்கு பாதாள சாக்கடை பணிகள் எப்போது வரும் என்பதே தெரியாத நிலை உள்ளது. பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு அதிகாரிகளும் கண்டு கொள்தில்லை.

கழிவுநீரோடைகள் என்றாலும், அவை பொதுப்பணித்துறைக்கு சொந்தமானைவ என  மாநகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பதால், தண்ணீர் செல்லும் பாதைகள் முற்றிலும் அடைபடுகின்றன. இதனால் இந்த கால்வாய்கள் மூலம் கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்வதில்லை. மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒரே இடத்தில் கழிவுகள் குவிந்து, பெரும் நீர் மாசுவை ஏற்படுத்துகின்றன. எனவே பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஆகும்.

நீர் நிலைகளை பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் கூட, குமரி மாவட்டத்தில் இயற்கையின் கொடையான நீர் நிலைகள் அழிக்கப்படுவதும், கழிவு நீர் கால்வாயாக மாறி கிடப்பதும் வேதனை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட போவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

இயற்கை மீது ஆர்வம் கொண்ட ஆட்சியர் தேவை

இது குறித்து குமரி மாவட்ட நீர் நிலை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூறுகையில், மாவட்ட கலெக்டர் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அதிகாரிகளும் இயற்கையின் மீது ஈர்ப்பு கொண்டவர்களாக இருந்தால் தான் இயற்கையை பாதுகாக்க முடியும். பல்வேறு இடங்களில் நீர் நிலைகள், வயல் வெளிகள் அழிக்கப்பட்டாலும் கூட இருக்கிற நீர் நிலைகள், இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: