திருச்சுழி பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களால் விபத்து அபாயம்: சரிசெய்ய கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இவைகளை சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பி.தொட்டியாங்குளத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருப்புக்கோட்டை, ஆத்திபட்டி, பாளையம்பட்டி, திருச்சுழி உட்பட 50க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். காரியபட்டி, கல்குறிச்சி செல்ல குறுக்கு வழியாக இச்சாலையை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

செல்லும் வழியில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. குறிப்பாக அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு பலத்த காற்று வீசினால் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. இவைகளை சரிசெய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மழைக்காலம் துவங்க உள்ளதால், மழைக்கு மின்கம்பம் சாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: