காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்குவதற்கு பாஜக 3 தலைமுறைகளாக உழைத்துள்ளனர்; இது அரசியல் பிரச்சனை அல்ல: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

மும்பை: காஷ்மீரில் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு,அங்கு அமைதி நிலவி வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி  மஹாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பிரச்சாரம் செய்தார். இதற்கிடையே, மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர்  21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், மும்பையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். மத்தியில் பா.ஜ., இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர்,  காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்குவது என்ற முடிவை அவர் தான் எடுத்தார். சிறப்பு சட்டம் 370வது பிரிவு அரசியல் பிரச்னை என ராகுல் சொல்கிறார். ராகுல் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால், சிறப்பு சட்டம் நீக்கத்திற்காக  பா.ஜ.,வினர் 3 தலைமுறைகளாக உழைத்துள்ளனர். இது அரசியல் பிரச்னை அல்ல. தேசத்தை ஒன்றாக வைப்பதற்கான எங்களது இலக்கு என்றார்.

1947-ல் காஷ்மீரில், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக, இந்திய ராணுவம் வலிமையுடன் போரிட்டு கொண்டிருந்த போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால்,  ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்னை வந்திருக்காது. சிறப்பு சட்டம் ரத்துக்கு பிறகு, காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. மோடி, பதவி ஏற்றபிறகு, சாத்தியம் இல்லாததை சாத்தியம் ஆக்கியுள்ளோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ‘சிவசேனாவும், பா.ஜ.க தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தன. அதில், பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக 122 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 63 தொகுதிகளிலும்,   காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது. முடிவில் சிவசேனாவுடன் இணைந்து பாஜக ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: