கடந்த 3 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் தீவிரவாதத் தடுப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த அல்கொய்தா தீவிரவாதி கைது

ராஞ்சி: கடந்த 3 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் தீவிரவாதத் தடுப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த அல்கொய்தா தீவிரவாதி முகமது காலிமுத்தின் முஜாஹிரி இன்று கைது செய்யப்பட்டார். டாட்டா நகர் ரயில் நிலையத்தில் மாறுவேடத்தில் வந்தவரை போலீஸார் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தபோது காலிமுத்தின் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தீவிரவாதத் தடுப்பு சிறப்புப் படையின் கூடுதல் இயக்குநர் போலீஸ் டிஜிபி எம்.எல் மீனா நிருபர்களிடம் இன்று கூறுகையில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தீவிரவாதி முகமது காலிமுதின் முஜாஹிரி கடந்த 3 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று தீவிரவாதப் பயிற்சி அளித்து வந்தார். ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காலிமுதின் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரின் உதவியாளர்கள் முகமது அப்துல் ரஹ்மான், அப்துல் சமி என்கிற உஜ்ஜிர் ஹசன் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டாடா நகர் ரயில் நிலையத்தில் மாறுவேடத்தில் காலிமுத்தின் வந்தபோது அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரின் பேச்சு சந்தேகம் எழுப்பவே போலீஸார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். உத்தரப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏழை இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளார். தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சவுதி அரேபியா நாடுகளுக்கும் கடந்த காலங்களில் காலிமுத்தின் சென்று வந்துள்ளார் என்று தெரிவித்தார்.

Related Stories: