ஈரோட்டில் கருணாநிதி சிலை திறப்பு விழா: திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி  சிலையை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.திமுக., தலைவராக இருந்த கருணாநிதி மறைவிற்கு பிறகு சென்னை அண்ணா  அறிவாலயத்தில் கருணாநிதிக்கு முதன்முறையாக சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து  ஈரோடு முனிசிபல் காலனியில் சிலை திறக்கப்பட்டது. தற்போது  ஈரோட்டில் 2வது  சிலையாக பன்னீர்செல்வம் பார்க்கில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டு  இன்று திறப்பு விழா நடக்க உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு நடக்க உள்ள  இவ்விழாவிற்கு திமுக., மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்குகிறார்.

 திமுக மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெதீசன் மற்றும் மாநில  நிர்வாகிகள் முன்னிலை  வகிக்கின்றனர். விழாவில் கலந்து கொள்ளும் திமுக.,  தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து விழா  பேரூரையாற்றுகிறார். இதற்காக இன்று மதியம் 12 மணிக்கு ஈரோடு வருகை தர  உள்ள திமுக .,தலைவர் ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று  ஈரோட்டில் பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த திமுக., இளைஞரணி மாநில  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பன்னீர்செல்வம் பார்க்கில் கருணாநிதி சிலை  நிறுவப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். முன்னதாக முனிசிபல்காலனியில்  உள்ள  கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியாருக்கு அருகில் கருணாநிதி: ஈரோடு எனது குருகுலம் என்று அடிக்கடி கருணாநிதி கூறுவார். தந்தை பெரியார்,  அண்ணா, கருணாநிதி ஆகிய மூவரும் ஈரோட்டில் ஒன்றாக தங்கி குடியரசு  அலுவலகத்தில் பணியாற்றியவர்கள். தற்போது தந்தை பெரியார் சிலைக்கு  அருகிலேயே  கருணாநிதியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரியார், அண்ணாவின்  சிலை திறக்கப்பட்ட நிலையில் தற்போது கருணாநிதி சிலையும் திறக்கப்பட  உள்ளதால் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய சிலைகள்  அடுத்தடுத்து  அமைந்துள்ளது.

Related Stories: