கீழடியின் தொடர்ச்சியாக மீனாட்சியம்மன் கோயில் அருகே அகழாய்வு நடத்தப்படுமா?

மதுரை:  கீழடியின் தொடர்ச்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மத்திய  தொல்லியல் துறை அகழாய்வு நடத்த 3 ஆண்டுக்கு முன் திட்டமிட்டு அனுமதி கோரியபோது மாநகராட்சி மறுத்தது. தற்போது தமிழர் நாகரீகம்  அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ள சூழலில் அந்த அகழாய்வு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை நான்காம் கட்ட ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், ‘‘தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகத்துடன் வாழ்ந்துள்ளனர். தமிழர் நாகரீகமே  தொன்மையானது’’ என்பதும் அறிவியல்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது.

 கீழடி அகழாய்வை, முதன்முதலில் மத்திய அரசின் தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் நடத்தி 2016ல் தமிழர்களின் நாகரீக தொன்மையை உலகுக்கு பறை சாற்றினார். கீழடி வைகை நதிக்கரை ஓரம் அமைந்துள்ளது. இதற்கும் பண்டை காலங்களில் மூதூர் என்று அழைக்கப்பட்ட மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக்கூடும் என்று கருதினார். மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளதால்,  மதுரை நகரமும் கிழக்கு நோக்கி உருவாகி உள்ளது. அதே கிழக்கு திசையில் சுமார் 30 கி.மீ. தொலைவில் கீழடி அமைந்துள்ளது.

எனவே கீழடி அகழாய்வின் தொடர்ச்சியாக வைகை நதி கரையில் குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் (பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதி), மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடத்த திட்டமிட்டு, 2016ல்  மதுரை மாநகராட்சியிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் அனுமதி கோரினார். இதற்கு மாநகராட்சி அனுமதியளிக்காமல் தட்டிக்கழித்தது. அப்போதைய மாநகராட்சி ஆணையரை, அமர்நாத் ராமகிருஷ்ணன் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டும்  பலிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, கீழடியில் கண்டறிந்த அரிய பொருட்கள் குறித்த விபரங்களை, மத்திய அரசிடம் இடைக்கால அறிக்கையாக அளித்தார். பின்னர் அவரை மத்திய அரசு அதிரடியாக மாற்றம் செய்து, அந்த அகழாய்வையே நிறுத்தியது. இதன்  பிறகு நியமிக்கப்பட்ட மத்திய தொல்லியல் துறை அதிகாரி, ‘கீழடி அகழாய்வை தொடர வேண்டியதில்லை’ என இழுத்து மூடினார்.

இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து, தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வை தொடர்ந்து நடத்தியது. இதன்மூலமே தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கும் முன்பே வைகை  நதிக்கரையில் நாகரீகமாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் அறிவியல்பூர்வமாக நிரூபணமாகி உள்ளன. இதன்மூலம் இந்த அகழாய்வு தொடர்ந்து விரிவடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் மாநகராட்சியால் மறுக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில்  மீண்டும் அகழாய்வு நடத்தும் திட்டம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு  தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கீழடியின் தொடர்ச்சியாக வைகை நதி கரையோரம் அமைந்துள்ள மதுரை நகரில் முக்கியமாக மீனாட்சி அம்மன் கோயில் அருகே அகழாய்வு நடத்த, மத்திய அரசின் தொல்லியல் துறை  திட்டமிட்டு கோரிய அனுமதி 3 ஆண்டுக்கு முன் மறுக்கப்பட்டது. தற்போது கீழடி அகழாய்வின் மூலம் தமிழர் நாகரீகமே தொன்மையானது என அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இந்த புதிய சூழலில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே அகழாய்வு நடத்த அனுமதி கிடைக்கிறோம் என எதிர்பார்க்கிறோம். அப்படி அனுமதி கிடைத்தால் மேலும் பல தமிழர்களின் பழங்கால ஆதாரங்கள் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

உலக பாரம்பரிய அந்தஸ்து இழப்பு; மத்திய தொல்லியல் துறை 2016ல் கீழடியின் தொடர்ச்சியாக திட்டமிட்டபடி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகிலும் அகழாய்வு நடத்தி, புராதன சிறப்புமிகுந்த மதுரையின் பாரம்பரியங்களை வெளிக்கொண்டு வந்து இருந்தால், சமீபத்தில்  ஐநாவின் யுனெஸ்கோ அறிவித்த உலக பாரம்பரிய நகர அந்தஸ்து மதுரைக்கு கைகூடி இருக்கும். அந்த அந்தஸ்தை மதுரை இழந்து ஜெய்ப்பூருக்கு திசைமாறி போனது. 

Related Stories: