×

10 ஆயிரத்து 500 பேருக்கு பணி வழங்கிய ரயில்வே பாதுகாப்புப் படை: 50 சதவீதம் பெண்கள் தேர்வு

மும்பை: ரயில்வே துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பாக, ரயில்வே பாதுகாப்புப் படையில் சமீபத்தில் 10 ஆயிரத்து 500 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 50 சதவீதம் கான்ஸ்டபிள் பணியிடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 537 ஜவான்களுக்கான இடம் காலியாக இருந்தது. இதில் 1,120 துணை ஆய்வாளர்கள், 8 ஆயிரத்து 619 போலீஸ் கான்ஸ்டபிள்கள், 798 உதவி ஊழியர்கள் பணி காலியாக இருந்தது.

இதற்கான காலியிடங்களை நிரப்பும் பணி கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பணி அமர்த்தல் மூலம் 10 ஆயிரத்து 537 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் கான்ஸ்டபிள் பிரிவில் மட்டும் 50 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண் கான்ஸ்டபிள்கள் 2.25 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். அதிகமான பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்

மத்திய பணியிட அமர்வுக் குழுவின் தலைவர் அடுல் பதக் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த 10 ஆயிரத்து 500 காலியிடங்களுக்கு மொத்தம் 82 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 1,120 துணை ஆய்பாளர் பணியிடத்துக்கு மட்டும் 14.25 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 59 லட்சம் விண்ணப்பங்களும், துணை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு 9 லட்சம் விண்ணப்பங்களும் வந்தன. 1,120 துணை ஆய்வாளர்கள் பணியிடங்களில் 819 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்னர். 8 ஆயிரத்து 619 கான்ஸ்டபிள் பணியிடங்களில் 4,403 பேர் ஆண்கள், 4,216 பேர் பெண்கள். அனைத்துத் தரப்பினருக்கும் உடல்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு முடிந்தது.

400 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் குறித்த போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. முதல் முறையாக கணினி முறையில் தேர்வுகள் நடத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பணிக்கு ஆட்கள் எடுக்கப்பட்டனர். ஒட்டுமொத்த பணித்தேர்வு முறை அனைத்தும் கணினி முறையில் நடந்து, இதில் எந்தவிதமான மனிதத் தலையீடுகளோ, அதிகாரிகள் தலையீடுகளோ இல்லை. முற்றிலும் தேர்வுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது என்று  அடுல் பதக் தெரிவித்துள்ளார்.

Tags : women ,Railway security force , 10 thousand 500 people, mission, railway security force, 50 percent, women, choice
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...