கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரையை சுத்தப்படுத்திய மாணவர்கள்: 4 டன் குப்பைகள் அகற்றம்

ராமேஸ்வரம்:  சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரை பகுதியில் மாணவர்கள், தன்னார்வலர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சர்வதேச கடலோர தூய்மை தினமான நேற்று ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் பல்வேறு அமைப்பின் சார்பில் சுத்தம் செய்யும் பணி மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு நடந்தது. ராமேஸ்வரத்தில் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின்  தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘குப்பை இல்லாத கடல் மற்றும் கடற்கரைக்கு பாடுபடுங்கள்’ என்னும் பொருளை மையப்படுத்தி தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கடலோர தூய்மை தினம்  கடைப்பிடிக்கப்பட்டது.

டாக்டர் சுவாமிநாதன் ஒருங்கிணைப்புடன் சங்குமால் கடற்கரையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, ராமேஸ்வரம் இந்திய கடற்படை ஏரியா கமாண்டர் ஏகே.தாஸ் துவக்கி வைத்தார். மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி  ஜான்சன், சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வேல்விழி ஆகியோர் கடலோர தூய்மை குறித்து பேசினர். தொடர்ந்து சங்குமால், அக்னி தீர்த்த கடற்கரை உளிட்ட கடலோர பகுதியில் சுற்றுலாப்பயணிகளால் வீசப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஈரத்துணிகள், உடைந்த பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

அரியமான் கடற்கரையில் இந்திய கடலோர காவல்படை சார்பில், காவல்படையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்தியன் கோஸ்ட் கார்ட் கமாண்டர் வெங்கடேசன் சுத்தம் செய்யும் பணியை துவக்கி  வைத்தார். கடலோர காவல்படை வீரர்கள், மிலிட்டரி பொறியியல் துறையினர், தமிழக கடலோர காவல்படை போலீசார், சுங்கத்துறையினர், மீன்வளத்துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள்  என 400க்கும் மேற்பட்டவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பைகள், பேக்கிங் பேப்பர்கள், உடைந்த கண்ணாடி துண்டுகள் என 4 டன் அளவிற்கு குப்பை அகற்றப்பட்டது. மேலும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களிடையே கடலோர தூய்மை குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு  பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: