தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க கட்டுப்பாடு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கவலை தெரிவித்த உரிமையாளர்கள்: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

திருவில்லிபுத்தூர்:  தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், மறுபரிசீலனை செய்யக்கோரி, திருவில்லிபுத்தூர் பகுதியில், டிஜிட்டல் பேனர் தயாரிப்பு உரிமையாளர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி  கவலையை தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த 10ம் தேதி பேனர் சரிந்து விழுந்ததில், டூவீலரில் சென்ற இன்ஜினியர் சுபாஸ்ரீ, நிலைதடுமாறி கீழே விழுந்து, பின்னால் வந்த லாரி ஏறி பலியானார். இதையடுத்து, தமிழகத்தில்  டிஜிட்டல் பேனர்கள் வைக்க, உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், அரசியல் கட்சியினர் இனி டிஜிட்டல் விளம்பர பேனர்களை வைக்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால்,  மாநிலத்தில் டிஜிட்டல் பேனர் தொழிலை நம்பியுள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட டிஜிட்டல் பேனர்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், திருவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘போஸ்டர், நோட்டீஸ் இவர்களின் மகன் டிஜிட்டல்  போஸ்டர், 18.9.19 அன்று அகால மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பேனரை தங்களது கடைகளின் முன் கட்டியுள்ளனர். மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘விருதுநகர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர் தயாரிப்பாளர்கள் உள்ளனர். அரசு மற்றும் அனைத்து கட்சியினரின் நிலைப்பாட்டால், மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  வேலையின்றி தவிக்கின்றனர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அனைத்துக் கட்சியினர் டிஜிட்டல் பேனர் மீதான தடையை நீக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: