மறைந்து வரும் மாட்டு வண்டிகளால் அழிந்து வரும் கொல்லர்பட்டறைகள்: மீண்டும் புத்துயிர் பெறுமா?

திருமங்கலம்:  மாட்டுவண்டிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், அழிவின் விளிம்பில் கொல்லர் பட்டறைகள் சென்றுவிட்டன.மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செங்கபடை, செக்கானூரணி, வலையங்குளம், காரியாபட்டி, ஆவியூர் என பல பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டு வண்டிகளை பழுது பார்க்கும் கொல்லர் பட்டறைகள் அதிகளவில் இருந்தன. திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள ஒரு பகுதி ‘கொல்லர்பட்டறை’ என்ற அடைமொழியுடன் தற்போது வரை அழைக்கப்பட்டு வருகிறது. இந்தளவிற்கு புகழ் பெற்ற கொல்லர்பட்டறை தொழில் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

திருமங்கலம் கொல்லர் பட்டறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 10 பட்டறைகள் இருந்தன. இவற்றில் தினமும் 30 முதல் 40 மாட்டுவண்டிகள் பழுதாகி வேலைக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் கொல்லர்பட்டறையை கடந்து செல்லவே முடியாத அளவிற்கு மாடுகளும், வண்டிகளும் தெருவில் ஆக்கிரமித்துக் காணப்படும். தற்போது பெயரளவிற்கு 2 கொல்லர் பட்டறைகள் மட்டுமே இந்த இடத்தில் இயங்கி வருகின்றன. ஆனால் மாட்டுவண்டிகள் தான் வருவதில்லை. இருப்பினும் தங்களது மூதாதையர்கள் செய்த தொழில் என்பதால் விடாமல் பட்டறையை நடத்தி வருகின்றனர்.இத்தொழிலைத் தொடரும் பட்டறை உரிமையாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது, ‘‘அந்த காலங்களில் விவசாயிகளின் உற்ற நண்பனாக மாட்டுவண்டிகள் திகழ்ந்தன.  

பழுதை சரி செய்ய உடனடியாக வண்டியோட்டிகள் எங்களது பட்டறைக்கு கொண்டு வருவர். ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 10 வண்டிகளில் பழுதை சரி செய்வோம். ஒவ்வொரு பட்டறையிலும் குறைந்தது 10 தொழிலாளர்கள் வரையில் வேலை செய்வர். மாட்டுவண்டியில் டயர் வண்டி வரவே வண்டிகளின் எண்ணிக்கை குறைய துவங்கியது. அதன்பின் டிராக்டர், லோடு வேன் என அடுத்தடுத்து நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வாகனங்கள் வரவே, தற்போது எங்கள் தொழிலும் அதல பாதாளத்தை நோக்கி செல்லத்துவங்கியது. தற்போது மாடுகளும் கிராமப்பகுதியில் குறைந்து விட்டன. மாட்டினை வாங்கி வண்டி கட்டி பராமரிப்பதற்கு பதில், விவசாயிகள் டிராக்டர் அல்லது வேனை வாங்கி லோடு அடித்துக் கொள்கின்றனர். இதனால் எங்களுக்கு வேலை குறைய துவங்கிவிட்டது. தற்போது திருமங்கலத்தில் 2 பட்டறைகள் மட்டுமே உள்ளன.

மாட்டுவண்டிகளின் மறைவையொட்டி தற்போது கட்டிடபயன்பாட்டு பொருள்களான கோடாலி, மண்வெட்டி, ஆப்பு, உளி, அரிவாள் உள்ளிட்ட சில பொருட்களைத் தயாரித்து பிழைப்பை ஓட்டுகிறோம். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது’’ என்றார்.

மற்றொரு பட்டறை உரியைமாளர் கருப்பசாமி கூறும்போது, ‘‘கொல்லர்பட்டறை தொழில் எங்கள் தலைமுறையுடன் முடிவடையும் நிலையில் உள்ளது. சுத்தியலை தூக்கி இரும்பை அடித்து வளைப்பது கடினமான வேலையாக இருப்பதால், இதனை கற்றுக்கொள்ள யாரும் விரும்பவில்லை. மாட்டுவண்டிகளும் இல்லை. ஏதோ பெயருக்கு தொழிலை நடத்திவருகிறோம். ஒரு நாளைக்கு ரூ.200 - 300 வரையில் வருமானம் கிடக்கிறது. அரசு இந்ததொழிலை நவீனப்படுத்தி தொடரவழி செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories: