மருத்துவ குணமிக்க குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?...ராமநாதபுரம், சிவகங்கை விவசாயிகள் எதிர்பார்ப்பு

இளையான்குடி/ ஆர்எஸ் மங்கலம்:  சிவகங்கை இளையான்குடி, ராமநாதபுரம் ஆர்எஸ் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மிளகாய் விவசாயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பங்கு அளப்பரியது. இப்பகுதியில் ஆண்டுதோறும் புரட்டாசி - ஐப்பசியில் நடவு செய்யும் விவசாயிகள், மாசி முதல் வைகாசி வரை மிளகாயை அறுவடை செய்கின்றனர். இந்த மிளகாய் பச்சையாகவும்,  மண்ணில் உலர்த்தி வத்தலாகவும் பல வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்றுமதியாகும் இந்த  ‘ராம்நாடு முண்டு’ எனப்படும் இந்த ‘குண்டு மிளகாய்’ சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் சுமார் 60 கிராமங்களிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர், முதுகுளத்தூர், கமுதி பகுதிகளிலும் அதிகம் விளைவிக்கப்படுகிறது. சுமார் 3 லட்சம் விவசாயிகள் இந்த மிளகாயை  தங்களது அதிமுக்கிய விவசாயமாக சாகுபடி செய்து வருகின்றனர்.

வணிகரீதியாகவும், தொழில் சார்பாகவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் என பல லட்சம் தொழிலாளர்கள் இந்த மிளகாய் சார்ந்த விளைச்சல், விற்பனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குண்டு மிளகாயில், பச்சை மிளகாயானது விட்டமின் ‘சி’ நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து, நோய் தொற்றை அகற்றி பாதுகாக்கும். பச்சை மிளகாயை கடித்தால் அதிகளவில் எச்சில் உற்பத்தியாகி ஜீரண சக்தி கிடைக்க உதவும்.  பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் சத்துக்கள் அதிகளவில் இதில் உள்ளதால் இதய துடிப்பு சீராக இயங்கவும், ரத்த அழுத்தத்தை பாதுகாத்து வைத்து, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.  சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து உணவில் பச்சை மிளகாயை சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். இயற்கையாகவே சிலிக்கான் சத்துக்கள் உள்ளதால், தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை அதிகரித்து, இளநரையை போக்கும். ‘விட்டமின் கே’ உள்ள இந்த பச்சை மிளகாய்க்கு எலும்புகளை வலுவாக மாற்றும் ஆற்றல் உண்டு.

கார குணமுடைய இந்த மிளகாய், நோய்களை உருவாக்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து ஆரோக்கியத்தை அள்ளித்தரும். மற்ற மிளகாயை விட, இந்த குண்டு மிளகாய் வடிவத்திலும் பயன்களிலும் கூடுதலாக ஜொலிக்கிறது. இதனால் மண்ணுக்கேற்ற வீரத்தை போல,  பல்வேறு மருத்து குணங்களை தன்னகத்தே கொன்டுள்ள இந்த குண்டு மிளகாய்க்கு  புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.  ஆர்எஸ் மங்கலத்தை சேர்ந்த மிளகாய் வியாபாரி ராமமூர்த்தி, விவசாயி பாலு கூறுகையில், ‘‘தமிழகத்தில் அதிகளவில் மிளகாய் விளைச்சல் ஒருங்கிணைந்த இந்த ராமநாதபுரம் பகுதியில்தான் இருக்கிறது. இதேபோல் அதிகளவில் மிளகாய் விற்பனைக்கான சந்தையும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆர்.எஸ்.மங்கலத்தில் கூடுகிறது. இந்த சந்தைக்கு பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகாசி, விருதுநகர், மதுரை என பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் மொத்த கொள்முதல் செய்ய வருகின்றனர்.

கொடைக்கானல் மலைப்பூண்டு, திண்டுக்கல் பூட்டு, பழநி பஞ்சாமிர்தம், திருவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வரிசையில் எங்களின் குண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு கிடைத்தால் நல்ல விலையும் கிடைப்பதுடன், எங்கள் வாழ்வாதாரமும் உயரும். எனவே தமிழக அரசு குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கொள்முதல் நிலையங்களும் அமைக்க வேண்டும்’’ என்றனர். இளையான்குடி விவசாயி மணிவண்ணன் கூறும்போது, ‘‘குண்டு மிளகாய் மருத்துவ குணமிக்கது. இவ்வகை மிளகாய் எங்கள் மண்ணில் மட்டுமே விளையும் தன்மை கொண்டிருக்கிறது. இப்பகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமாகவும் இந்த குண்டு மிளகாய் விவசாயம் இருக்கிறது. எனவே குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: