நங்கநல்லூர், ராயப்பேட்டையில் துணிகரம் தொழிலதிபர், அரசு அதிகாரி வீடுகளில் 137 சவரன், வைர நகைகள் கொள்ளை: வடமாநில ஆசாமிகள் 3 பேருக்கு வலை

சென்னை: நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளையும், ராயப்பேட்டையில் அரசு அதிகாரி வீட்டில் 12 சவரன் நகைகளையும், நங்கநல்லூரில் மற்றொரு அரசு அதிகாரி வீட்டில் 5 சவரன் நகைகளையும்  கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். நங்கநல்லூர் ஸ்டேட் பாங்க் காலனி விரிவு 2வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ரமேஷ் (52), கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் சபரிமலைக்கு சென்றிருந்தார். இதனால் அவரது மனைவி மற்றும்  குழந்தைகள் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினர். நேற்று முன்தினம் மாலை அவர்கள் வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 120 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹4  லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், வெள்ளிப்பொருட்கள், ₹1 லட்சம் ெராக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.தகவலறிந்து தென் மண்டல இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர்,  உதவி கமிஷனர் சங்கரநாராயணன் மற்றும் பழவந்தாங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள்  வந்து வீட்டின் கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ைகரேகைகளை பதிவு செய்தனர்.

Advertising
Advertising

பின்னர் வீடு மற்றும் அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மேற்படி வீட்டில் வடநாட்டு கொள்ளையர்கள் 3 பேர் உள்ளே நடமாடியது தெரியவந்தது. இந்த பதிவுகளை வைத்து போலீசார் அக்கம்  பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் கடந்த 2 நாட்களாக 3 வடநாட்டு ஆசாமிகள் இந்த பகுதியில் அடிக்கடி சென்று வந்ததை பார்த்ததாக கூறினர். இதுகுறித்து இணை கமிஷனர் மகேஸ்வரி கூறும்போது, ‘இந்த வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் அடையாளம் தெரிந்துள்ளது. இவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தப்பிச் செல்லாத வகையில்  தேடுதல்  வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்’’ என்றார். ராயப்பேட்டை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கார்க்கி, இவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று  முன்தினம் இவர், குடும்பத்துடன் வெளியில் சென்று, இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த கார்க்கி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 12 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி  பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

இதுகுறித்து ஐஸ்அவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.நங்கநல்லூர்: நங்கநல்லூர் லட்சுமி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (65). மத்திய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன்  அமெரிக்காவில் வசிக்கும் மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கீழ் வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அமெரிக்காவில் உள்ள சீனிவாசனுக்கு நேற்று முன்தினம் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சீனிவாசனின் உறவினர்கள் வந்து பார்த்த போது,  பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: